பாலியல் தொல்லை வழக்குத் தொடர்பான தீர்ப்பை எதிர்த்து ஓய்வு பெற்ற சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை வரும் 12 தேதிக்கு விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதி மன்றம் ஒத்திவைத்தது.
கடந்த 2021 ஆண்டு பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஓய்வு பெற்ற சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதும், இது குறித்து புகார் அளிக்கச் சென்ற பெண் எஸ்.பி.யை தடுத்ததாக அப்போதைய செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி.யாக இருந்த கண்ணன் மீதும் சிபி சிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
வழக்கை விசாரித்த விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூன் 16 ஆம் தேதி தீர்ப்பளித்தது. அதில், ஓய்வு பெற்ற சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ்க்கு இரு பிரிவுகளின் கீழ் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை (ஏக காலம்) விதிக்கப்பட்டது. எஸ்.பி., கண்ணனுக்கு ரூ.500 அபராதம் மட்டும் விதிக்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற சிறப்பு டிஜிபி, எஸ்.பி.சார்பில் தனித் தனியாக மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களின் விசாரணை மீது நடைபெற்றது. ஏற்கெனவே நடைபெற்ற விசாரணையின் போது, மேல்முறையீட்டு வழக்கை வேறு மாவட்டத்துக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளதாக ராஜேஷ்தாஸ் தெரிவித்தார்.
கடந்த டிசம்பர் 19 தேதி நடைபெற்ற விசாரணையின் போது மேல்முறையீட்டு மனு மீது ஜனவரி 6 தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் அறிவித்தது.
தீர்ப்பு ஒத்திவைப்பு
சனிக்கிழமை நடைபெற்ற விசாரணையின் போது ராஜேஷ்தாஸ் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.பூர்ணிமா, இந்த வழக்கை வேறு மாவட்டத்துக்கு மாற்றக் கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நிலுவையில் இருப்பதால், மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை ஜனவரி 12 தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.