குஜராத்தில் இருந்து பெங்களூரு வழியாக திருவண்ணாமலைக்கு சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான 1.5 டன் பான் மசாலா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு மார்க்கத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி குஜராத் மாநில பதிவு எண் கொண்ட கார் ஒன்று வேகமாக வந்துள்ளது.
செங்கம் அடுத்த மேல் செங்கத்தில் வந்த போது, சாலையோரம் கட்டப்பட்டிருந்த தடுப்பு மீது மோதியதாக கூறப்படுகிறது.இதுகுறித்து தகவலறிந்த மேல்செங்கம் மற்றும் செங்கம் காவல் துறையினர் சொகுசு காரை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சொகுசு காரை பின் தொடர்ந்து மேல்செங்கம் காவல் துறையினர் சென்றனர்.
செங்கம் – திருவள்ளுவர் நகர் அருகே சொகுசு காரை, செங்கம் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். காவல் துறையினர் சுற்றி வளைப்பதை அறிந்து, காரில் இருந்த 2 பேர் தப்பியோடிவிட்டனர். காரை மடக்கிய காவல் துறையினர், தப்பியோடிய 2 பேரையும் மடக்கிப் பிடிக்க முயன்றும் முடியவில்லை. அதை தொடர்ந்து
சொகுசு காரை சோதனையிட்ட போது அதில் சுமார் 77 மூட்டைகளில் 1.5 டன் எடையில் பல வகை பான் மசாலா பொருட்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதன் மதிப்பு ரூ.10 லட்சம் என கூறப்படுகிறது.
குஜராத் மாநிலத்தில் இருந்து பெங்களூரு வழியாக திருவண்ணாமலை மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு பான் மசாலா கடத்தி செல்ல முயன்றது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.இதுகுறித்து செங்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய 2 பேரை தேடி வருகின்றனர்.