குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கும் அறிவிப்பை தமிழக அரசு விரைவில் வெளியிடவுள்ளது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட தமிழ்நாடு அரசு ஓவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி வருகிறது.
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் 2009 ஆம் வருடம் இந்த திட்டத்தை கொண்டு வந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசு தொகுப்பு வழங்கினார். இந்த திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ரொக்கத்துடன் பொங்கல் பரிசை அரசு வழங்குகி வருகிறது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் இந்த ஆண்டுக்கான பரிசு தொகுப்புகள் வழங்குவது தொடர்பாக முதல்வர் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் எற்பட்ட புயல் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடரால் வட மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் மிக பெரிய சேதம் ஏற்பட்டது. அதற்கான மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் அரசு முழுக்கவனத்தையும் செலுத்தி வருகிறது.
தற்போது ஓரளவிற்கு இயல்பு நிலைக்கு மாவட்டங்கள் திரும்பியுள்ள நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அதன்படி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொடுக்கப்படும் பொருட்கள் இருப்பை உறுதி செய்து வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான அறிவிப்பை அரசு வெளியிட்டவுடன் டோக்கன் விநியோகம் செய்வது உள்ளிட்ட பணிகளை விரைவில் தொடங்கிடுவோம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்தாண்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடுபங்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சக்கரை, முழு கரும்பு மற்றும் ரூ .1000 ரொக்கம் ஆகியவற்றை 2 கோடியே 19 லட்சத்து 33 ஆயிரத்து 342 குடும்பங்களுக்கு வழங்க அரசு ரூ.2429.05 கோடி ஒதிக்கீடு செய்தது குறிப்பிடத்தக்கது.