வீரசோழபுரத்தில் ரூ.139.41 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டிட கட்டுமானப் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம், வீரசோழபுரத்தில் பொதுப்பணித்துறையின் சார்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டிட கட்டுமானப் பணிகளை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.
புதிதாகக் கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டிடம் 8 தளங்களைக் கொண்டு ரூ.139.41 கோடி மதிப்பீட்டில் சுமார் 35.18 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைதளத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், பத்திரிக்கையாளர் அறை, மாவட்ட கருவூலம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மறுவாழ்வு அலுவலகம், வருவாய் பதிவேடு அறை, தேர்தல் காப்பறை, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், குறைதீர்ப்பு கூட்ட அரங்கு, வங்கி, தபால் அலுவலகம், பதிவேடு அறை ஆகியன அமைக்கப்பட உள்ளது.
முதல் தளத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, தேர்தல் அலுவலகம், திட்ட இயக்குநர் அலுவலகம், வருவாய் அலுவலகங்கள், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் அலுவலகம் ஆகியவையும், இரண்டாம் தளத்தில் மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட ஆதிதிராவிடர் நல வாரியம், மாவட்ட சமூக நலத்துறை, மாவட்ட பள்ளி நல அலுவலகம், மாவட்ட வழங்கல் அலுவலகம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) அலுவலகம், உதவி இயக்குநர் கனிமவளம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அலுவலகம் ஆகியவையும், மூன்றாம் தளத்தில் மாவட்ட ஆட்சியர் அறை, கூட்ட அரங்கம், காணொலிக் காட்சி அறை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), கலந்தாய்வு அறை, எல்காட், என்.ஐ.சி., வருவாய்த் துறை அலுவலகம், பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை ஆகியவையும் கட்டப்பட உள்ளது.
நான்காம் தளத்தில் பாஸ்போர்ட் அலுவலகம், முன்னாள் இராணுவத்தினர் நல வாரியம், கைத்தறி அலுவலகம், தேர்தல் அலுவலகம், இந்து சமய அறநிலையத்துறை, தமிழ்வளர்ச்சி அலுவலகம், தணிக்கை அலுவலகம், பஞ்சாயத்து, உள்ளுர் திட்டமிடல், நில அளவையர் அலுவலகம், சுகாதாரத்துறை, உதவி இயக்குநர் மீன்வளத்துறை, உதவி இயக்குநர் கலால் துறை ஆகியவையும், ஐந்தாம் தளத்தில் கூட்டுறவுத்துறை, புள்ளியியல் துறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், அரசு கேபிள் டிவி, வீட்டு வசதி வாரியம், மாவட்ட பதிவாளர் அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம், சத்துணவுத்துறை, குடிசை மாற்று வாரியம், குழந்தைகள் நல வாரியம், தொழிலாளர் நலத்துறை, முதன்மை கல்வி அலுவலகம், தொடக்கல்வி அலுவலகம் ஆகியவையும் கட்டப்பட உள்ளது.
ஆறாம் தனத்தில் உணவு பாதுகாப்புத்துறை, தீயணைப்புத் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை, குடிநீர் வடிகால் வாரியம், பொதுப்பணித்துறை (கட்டிடம்), (நீர்வள ஆதார அமைப்பு), மகளிர் சுய உதவிக்குழு, மாவட்ட நூலகம், மாவட்ட கல்வி அலுவலகம், பட்டுவளர்ப்புத் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மகளிர் உடற்பயிற்சி கூடம், ஆடவர் உடற்பயிற்சி கூடம், ஆவின் அலுவலகம் ஆகியவையும், ஏழாம் தளத்தில் சுற்றுலாத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், தொழில்துறை, வேளாண் விற்பனைக் கழகம், வேளாண் பொறியியல் துறை ஆகியவையும், எட்டாம் தளத்தில் மின்தூக்கி அறை, படி அறை ஆகியவையும் கட்டப்பட உள்ளது.
புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டிட கட்டுமானப் பணிகள் திட்ட வரைபடம், பணி நடைபெறும் இடம், கட்டுமானப் பொருட்களின் தரம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: கள்ளக்குறிச்சி மாவட்டம் அறிவிக்கப்பட்டு 4 ஆண்டு கால நிறைவு அடைந்ததுடன், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டவில்லை என்ற குறை பொதுமக்களிடம் இருந்தது. ஆட்சியர் அலுவலகக் கட்டிடம் ரூ.139.41 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது.
இந்த புதிய கட்டிட கட்டுமானப் பணிகள் அரசால் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருவதுடன் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட கால அளவுகளில் முடிக்க வேண்டிய பணிகள் குறித்து பொதுப்பணித்துறையின் சார்பில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களின் நலன் கருதி இக்கட்டிட கட்டுமானப் பணிகளை விரைவாக முடிக்க ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமானப் பணிகளை முழுவதுமாக முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டுமானப் பணிகள் முடிவுற்றவுடன் தமிழக முதல்வரால் இப்புதிய கட்டிடத்தை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கல்வராயன் மலையில் பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்ப சாலை வசதி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துவதுடன் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் சாலைப் பணிகள் குறித்து ஆய்வு செய்து இப்பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மலையரசன் மற்றும் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் நா.சத்தியநாராயணன், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் எஸ்.மணிவண்ணன், கண்காணிப்புப் பொறியாளர் பரிதி, செயற்பொறியாளர் ஹேமா, உதவி செயற்பொறியாளர் ராஜுவ் மற்றும் உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள், பொதுப்பணித்துறை உயர் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.