” நாட்டின் பாதுகாப்புக்காக ஸ்பைவேரை பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால், அதனை யாருக்கு எதிராக பயன்படுத்துகிறோம் என்பதே கேள்வி,” என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ., என்ற நிறுவனம், ‘பெகாசஸ் ஸ்பைவேர்’ என்ற உளவு மென்பொருளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இது, ‘ஐ – போன், ஆண்ட்ராய்டு’ உள்ளிட்ட அனைத்து விதமான இயங்கு தளங்களிலும் எளிதாக ஊடுருவி, உளவு பார்க்கும் திறன் உடையது.
இந்நிலையில் நம் நாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள், நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உட்பட பல்வேறு துறையினரும், இந்த பெகாசஸ் மென்பொருள் வாயிலாக உளவு பார்க்கப்படுவதாக கடந்த ஆண்டு செய்தி வெளியானது.
இது தொடர்பாக, கடந்த 2021ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளன. இந்தக் குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்தது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ரவீந்திரன் தலைமையில் 3 பேர் கொண்ட குழு ஒன்றை உச்சநீதிமன்றம் அமைத்து இருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் கோடீஸ்வர் சிங் அமர்வு முன்பு நேற்று (29ம் தேதி) விசாரணைக்கு வந்தது.
அப்போது சில மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தினேஷ் திவேதி கூறுகையில்:
இந்த விவகாரத்தில், ஸ்பைவேரை மத்திய அரசு வைத்து உள்ளதா அல்லது வாங்கி உள்ளதா இல்லையா என்பது தான் அடிப்படை பிரச்னை. அரசிடம் இருந்தால், இன்று வரை தொடர்ந்து பயன்படுத்தாமல் இருக்க முடியாது என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி சூர்ய காந்த் கூறியதாவது:
ஸ்பைவேரை அரசு பயன்படுத்துவதில் என்ன தவறு. ஸ்பைவேரை வைத்து இருப்பது தவறில்லை. யாருக்கு எதிராக பயன்படுத்துகிறோம் என்பது தான் முக்கியம். நாட்டின் பாதுகாப்பில் சமரசம் அல்லது தியாகம் செய்ய முடியாது என்றார்.
இதனைத் தொடர்ந்து மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில், பயங்கரவாதிகள், தனியுரிமையை கோர முடியாது என்றார்.
அதற்கு நீதிபதி சூரியகாந்த்: தனி நபருக்கான தனி உரிமை அரசியல்சாசனத்தின்படி பாதுகாக்கப்பட்டது என்றார்.
இதனைத் தொடர்ந்து பெகாசசுக்கு எதிராக வாட்ஸ் அப் செயலி சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அமெரிக்க நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் நகலை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூலை 30ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.