பிரயாக் ராஜில் நடந்த கும்பமேளாவில் 45 நாட்களில் ரூ. 30 கோடி வருவாய் ஈட்டிய படகோட்டி குறித்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் இது.
உலகில் அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் கூடும் நிகழ்வான, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில், கடந்த ஜனவரி 13ம் தேதி தொடங்கிய இந்த விழா,பிப் 26 அன்று நிறைவு பெற்றுள்ளது.
இதில், பல சுவாரஸ்ய சம்பவங்கள் நடைபெற்றன. அதில், நீராடிய முக்கிய பிரபலங்கள், ஒரேநாளில் வைரலான இளம்பெண், திரிவேணிச் சங்கமத்தில் உயிரிழப்பு , தீ விபத்து, திரிவேணிச் சங்கமத்தில் பாக்டீரியா இருப்பதாக ஆய்வு அறிக்கை என பலவற்றை கூறிக்கொண்டே போகலாம்.
அந்தவரிசையில், கும்பமேளாவில் 45 நாட்களில் படகோட்டி குடும்பம் ஒன்று கிட்டதட்ட ரூ. 30 கோடி வரை வருவாய் ஈட்டி இருக்கும் சுவாரஸ்ய சம்பவமும் இடம்பெற்றிருக்கிறது. ஆமாங்க. கும்பமேளாவுக்கு வரும் பக்தர்களை படகில் அழைத்துச் சென்று ஈட்டிய வருவாய்.
உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சட்டசபையில் இந்த நிகழ்வை பகிர்ந்துள்ளார்.
இந்த சம்பவம் பற்றி அவர் பேசும்போது,
“ நான் ஒரு படகோட்டி குடும்பத்தின் வெற்றிக் கதையைச் சொல்கிறேன். அந்த படகோட்டியிடம் 130 படகுகள் இருந்தன. அவற்றின் உதவியுடன் கும்பமேளா நடந்த 45 நாட்களிலும் அவர் ரூ.30 கோடி வருவாய் ஈட்டியுள்ளார். அப்படியென்றால், 45 நாட்களில் ஒவ்வொரு படகும் ரூ.23 லட்சம் அவருக்கு வருவாய் ஈட்டி தந்துள்ளது. நாளொன்றுக்கு ஒரு படகிற்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.52 ஆயிரம் வரை வருவாய் கிடைத்துள்ளது.” என கூறினார்.
இந்த சம்பவம் கேட்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இதுமட்டுமல்ல, துன்புறுத்தல், கடத்தல், கொலை ,கொள்ளை தொடர்பாக ஒரு வழக்கு கூட பதிவாகவில்லை என்றும், 66 கோடி மக்களும் மகிழ்ச்சியுடன் பங்கேற்றதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், மகா கும்பமேளாவில் ரூ.7,500 கோடி முதலீடு செய்யப்பட்டதன் மூலம் ரூ.3 லட்சம் கோடி வணிக வருவாய் கிடைத்ததாகவும், இதனால் பல தொழில்கள் பயனடைந்ததாகவும் கூறிய அவர்,
ஹோட்டல்களில் ரூ.40,000 கோடி, உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் மூலம் ரூ.33,000 கோடி, போக்குவரத்தில் ரூ.1.5 லட்சம் கோடி, மதப் பிரசாதங்கள் மூலம் ரூ.20,000 கோடி, நன்கொடைகள் மூலம் ரூ.660 கோடி, சுங்க வரிகள் மூலம் ரூ.300 கோடி, மற்றும் பிற வருவாய் ஆதாரங்கள் மூலம் ரூ.66,000 கோடி என வருவாய் ஈட்டியதாகவும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.