”குரியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிடும் சூழ்நிலை இருக்கக்கூடாது,” என துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார்.
ராஜ்யசபா குழு தொடர்பாக நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஜக்தீப் தன்கர் பேசியதாவது:
நாட்டில் சட்டத்தின் ஆட்சியை செயல்படுத்துவது தான் ஒருவரின் வேலை. அதற்கு யாரின் அனுமதியும் தேவையில்லை. ஆனால், நீதிபதிகள் மீது நேரடியாக வழக்குப்பதிவு செய்ய முடியாது. நீதித்துறை அனுமதி பெற வேண்டும். ஆனால், அரசியலமைப்பில் அவ்வாறு கூறப்படவில்லை.
வழக்கு தொடர்வதில் இருந்து குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநருக்கு மட்டுமே விலக்கு அளித்து உள்ளது. அப்படியானால் சட்டத்திற்கு அப்பாற்பட்ட ஒரு பிரிவு எப்படி இந்த விலக்கை பெற்றுள்ளது. இதன் விளைவுகள் அனைவரின் மனதிலும் உணரப்படுகிறது.
சமீபத்திய தீர்ப்பு மூலம்குடியரசுத் தலைவருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடு எதை நோக்கி செல்கிறது? நாட்டில் என்ன நடக்கிறது? தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு செய்கிறோமா இல்லையா என்பதைப் பற்றியது அல்ல? ஜனநாயகத்திற்காக நாங்கள் எப்போதும் பேரம் பேசியது கிடையாது. குறிப்பிட்ட காலத்திற்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க வேண்டும் அல்லது அது சட்டமாகிவிடும்.
நம்மிடம் உள்ள நீதிபதிகள் சட்டம் இயற்றுபவர்களாகவும், நிர்வாக செயல்பாடுகளை ஆய்வு செய்பவர்களாகவும், சூப்பர் பார்லிமென்ட் ஆக செயல்படுபவர்களாகவும் உள்ளனர்.நாட்டின் சட்டம் அவர்களுக்கு பொருந்தாத காரணத்தினால் அவர்களுக்கு எந்த பொறுப்பும் இல்லை.
குடியரசுத் தலைவரை உச்சநீதிமன்றம் வழிநடத்தும் சூழ்நிலையை அனுமதிக்க முடியாது.அரசியலமைப்பின் கீழ் உச்சநீதிமன்றத்திற்கு உள்ள ஒரே உரிமை சட்டப்பிரிவு 145(3) ஐ விளக்குவதுதான். அங்கு ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நீதிபதிகள் இருக்க வேண்டும். பிரிவு 142 ஜனநாயக சக்திகளுக்கு எதிரான ஏவுகணையாக மாறி உள்ளது. இவ்வாறு ஜக்தீப் தன்கர் பேசினார்.