”பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து விவாதிக்க மக்களவையின் சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட வேண்டும்,” என பிரதமர் மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.
காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் 26 பேர் உயிரிழந்தனர். இது நாட்டு மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த சம்பவத்திற்கு அனைத்து கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில் பிரதமர் மோடிக்கு லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:
பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் அனைத்து இந்தியர்களுக்கும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த முக்கியமான தருணத்தில், நாம் அனைவரும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒருங்கிணைந்து நிற்கிறோம் என்பதை இந்தியா காட்ட வேண்டும்.
இதற்காக மக்களவையின் இரு அவைகளின் சிறப்புக் கூட்டத்தொடரை கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சிகள் நம்புகின்றன. அங்கு, நமது ஒற்றுமையை மக்கள் பிரதிநிதிகள் எடுத்துக் காட்ட முடியும். எனவே விரைவில் மக்களவையின் சிறப்புக் கூட்டத்தொடரை கூட்ட வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் ராகுல் காந்தி கூறியுள்ளார்.