குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை பிரதமர் மோடி கடந்த 15ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று நேரில் சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து, அன்று மாலையே பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா இல்லத்தில் பாஜக தலைவர்களின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
நீண்ட நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பியூஷ் கோயல், அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். முதலில் வக்ஃப் சட்டத்திருத்தம் தொடர்பாக ஆலோசனை நடைபெற்றதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது அமைச்சரவை மாற்றம் தொடர்பாக விவாதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பாஜகவின் புதிய தேசியத் தலைவருக்கான தேர்தல் செயல்முறைகள் அடுத்த வாரம் தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. மத்திய அமைச்சர்களில் ஒருவர் பாஜக தேசிய தலைவராகத் தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படும் நிலையில், மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய பாஜக தலைமை முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.
அதன்படி, தமிழ்நாட்டைச் சேர்ந்த பாஜக தலைவர் ஒருவரும், கூட்டணி கட்சிகளான அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, பிகாரின் ராஷ்டிரிய லோக் சம்தா ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு கொடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டிலிருந்து அண்ணாமலை பெயரும், பிகாரில் இருந்து உபேந்திர குஷ்வாஹாவின் பெயரும் அரசியல் வட்டாரத்தில் அடிபடுவது குறிப்பிடத்தக்கது.