மஹாராஷ்டிரா அமைச்சரவையில் இருந்து அமைச்சர் தனஞ்ஜெய் முண்டே திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
மஹாராஷ்டிரா அமைச்சரவையில் தனஞ்ஜெய் முண்டே உணவு மற்றும் சிவில் விநியோகத்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து வந்தார். தேசியவாத காங். கட்சியைச் சேர்ந்த இவர் பார்லி தொகுதியில் வெற்றி பெற்றவர். இவரின் பார்லி தொகுதி பீட் மாவட்டத்தில் உள்ளது. அந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராகவும் இருந்தார்.
கடந்தாண்டு இறுதியில் பீட் ஊராட்சி தலைவர் சந்தோஷ் தேஷ்முக் கொல்லப்பட்ட சம்பவத்தில் அவரின் உதவியாளர் வால்மிக் கரட் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் முண்டே பெயர் சேர்க்கப்படவில்லை. இருப்பினும், எதிர்க்கட்சிகள் தனஞ்ஜெய் முண்டே ராஜினாமா செய்ய வேண்டும் என்று போர்க்கொடி தூக்கின.
எதிர்கட்சிகளின் கடும் நெருக்கடியைத் தொடர்ந்து. குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் உறுதி அளித்து இருந்தார்.
இந் நிலையில் அமைச்சர் பதவியில் இருந்து தனஞ்ஜெய் முண்டே விலகி உள்ளார். அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்டு விட்டதாக முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் கூறி இருக்கிறார்.
முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது :-
அவர் (தனஞ்ஜெய் முண்டே) தமது ராஜினாமா கடிதத்தை இன்று (நேற்று)அளித்துள்ளார். அதை நான் ஏற்றுக் கொண்டுவிட்டேன். அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்கு அந்த கடிதத்தை நான் கவர்னருக்கு அனுப்பி வைத்துவிட்டேன்.
இவ்வாறு தேவேந்திர பட்னவிஸ் கூறியுள்ளார்.
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த தனஞ்செய் முண்டே, மறைந்த பா.ஜ.க, மூத்த தலைவரும், மஹாராஷ்டிரா முன்னாள் துணை முதல்வருமாக இருந்த கோபிநாத் முண்டேவின் சகோதரர் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.