மகாராஷ்டிரா மாநில அரசு, மகாராஷ்டிரா அரசுப் பேருந்துகள் கர்நாடகாவுக்கு செல்வதை நிறுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா பகுதியில் மகாராஷ்டிரா மாநில அரசுப் பேருந்து தாக்கப்பட்டது. மேலும், அந்தப் பேருந்தின் ஓட்டுநர் பாஸ்கர் ஜாதவ் முகத்தில் கருப்பு மை பூசியதுடன் அவரைத் தாக்கியதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து பெங்களூருவில் இருந்து மகாராஷ்டிரா செல்லும் மகாராஷ்டிரா பேருந்து சேவையை நிறுத்துவதாக மகாராஷ்டிரா மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரதாப் சார்நாய்க் அறிவித்துள்ளார்..
கடந்த 21ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு சுமார் 9 மணி அளவில் மகாராஷ்டிரா மாநில அரசுப் பேருந்து கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, அந்தப் பேருந்தை வழிமறித்த கன்னட ஆதரவாளர்கள், பேருந்தை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும், அந்தப் பேருந்தின் ஓட்டுநர் பாஸ்கர் ஜாதவ் முகத்தில் கருப்பு மையை பூசி அவரையும் தாக்கியுள்ளனர்.
இதனையடுத்து, கர்நாடகா அரசு இந்த விவகாரத்தில் உரிய தீர்வை எட்டும்வரை எங்கள் மாநில அரசுப் பேருந்துகள் அங்கு இயக்கப்படாது என்று மகாராஷ்டிரா மாநிலம் அறிவித்துள்ளது.
அதே வெள்ளிக்கிழமை அன்று கர்நாடகா – மகாராஷ்டிரா எல்லைப் பகுதியை ஒட்டி இருக்கும் பெலகாவி பகுதியில் கர்நாடகா மாநில அரசுப் பேருந்து ஓட்டுநர் மராத்தியர்களால் தாக்கப்பட்டுள்ளார்.
கர்நாடகா – மகாராஷ்டிரா எல்லை பகுதியான பெலகாவியில் அதிகமான மராத்தியர்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், சுலேபவி பகுதியில் 14வயது சிறுமி ஒருவர் கர்நாடகா அரசுப் பேருந்தில் ஏறியுள்ளார். அவர் அந்தப் பேருந்து நடத்துநரிடம் மராத்தி மொழியில் பேசியுள்ளார். அதற்கு அந்த நடத்துநர் கன்னடத்தில் பேசச் சொல்லியுள்ளார். இதில் அவருக்கும், அந்த சிறுமிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பிறகு அந்த சிறுமியின் நண்பர்கள் இணைந்து அந்த பேருந்து நடத்துநரை தாக்கியுள்ளனர். இந்த விவகாரத்தில் நடத்துநர் கொடுத்த புகாரின் அடிப்படையில், கர்நாடகா காவல்துறையினர் நான்கு பேரை கைது செய்துள்ளனர். மேலும் அந்த சிறுமி கொடுத்த புகாரின் பேரில் நடத்துநர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த இரண்டு சம்பவங்களும் ஒரே நாளில் நிகழ்ந்துள்ளது. எனவே, பெலகாவி விவகாரத்தின் காரணமாக மகாராஷ்டிரா பேருந்தும், ஓட்டுநரும் தாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. ஆனால், இரண்டு சம்பவத்திற்கும் தொடர்பில்லை என்று சொல்லப்படுகிறது.
காவல்துறையினர் இந்த விவகாரத்தை தீவிரமாக விசாரித்து வருகின்றனர். விசாரணையின் முடிவிலேயே இந்த இரண்டு விவகாரமும் ஒன்றோடொன்று தொடர்புடையதா அல்லது இரண்டும் தனிப்பட்ட காரணங்களால் நடந்ததா என்பது தெரியவரும்.