சுப்ரீம்கோர்ட்டின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கைகளை தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளி வருகின்றன.
அமெரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான் உட்பட உலகின் பல நாடுகளில் அந்த நாடுகளின் சுப்ரீம்கோர்ட் அரசு நிர்வாகத்துடன் மோதி வந்ததை செய்திகளாக படித்திருக்கிறோம். இஸ்ரேல், இத்தாலி நாடுகள் உட்பட உலகின் பல நாடுகளில் இப்படி ஒரு சிக்கல் நிலவி வருவதும் உண்மை தான். இப்போது இந்தியாவிலும் மத்திய அரசுக்கும், சுப்ரீம்கோர்ட்டுக்கும் இடையே அதிகார மோதல் தொடங்கி விட்டதாகத் தெரிகிறது.
குறிப்பாக சுப்ரீம் கோர்ட்டை ‘சூப்பர் பார்லிமெண்ட்’ என துணை ஜனாதிபதியே கடுமையாக விமர்சித்தது நாடு முழுவதும் இக்கட்டான ஒரு நிலையை ஏற்படுத்தி உள்ளது. அரசு நிர்வாகத்துடன் சுப்ரீம்கோர்ட் கடும் மோதலில் ஈடுபட்டுள்ளதாகவே வெளிப்படையான தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக கவர்னர் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிறுத்தி வைத்ததற்கு எதிராக சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு வழங்கியதையும், அந்த மசோதாக்களுக்கு சுப்ரீம் கோர்ட்டே அனுமதி வழங்கியதையும், அதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி தமிழக அரசு அந்த மசோதாக்களை சட்டமாக அரசு இதழில் வெளியிட்டதையும், மசோதாக்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக ஜனாதிபதிக்கே நீதிபதிகள் உத்தரவு வழங்கியதையும் மத்திய அரசு ரசிக்கவில்லை.
மாறாக இந்த விஷயங்கள் மத்திய அரசு நிர்வாகத்தில் பெரும் புயலை கிளப்பி உள்ளது. இந்த புயல் முடிவடைவதற்குள், பார்லிமெண்ட்டின் இருசபைகளிலும் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பிறகு சட்டமான வக்போர்டு திருத்த சட்டத்தில், சுப்ரீம்கோர்ட் பல குறைகளை சுட்டிக்காட்டி, மத்திய அரசுக்கு பல வழிகாட்டுதல்களை வழங்கியது, போன்ற சம்பவங்கள் மத்திய அரசை கொந்தளிக்க வைத்துள்ளது.
ஜனாதிபதிக்கே உத்தரவு போடும் அளவுக்கு சுப்ரீம்கோர்ட்டுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதா?. பார்லிமெண்ட்டின் இரு சபைகள், மத்திய அரசு நிர்வாகம், ஜனாதிபதியை விட சுப்ரீம்கோர்ட்டுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதா என மத்திய அரசு மிகத் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. மத்திய அரசின் கடும் கோபத்தை வெளிப்படுத்தும் வகையில், துணை ஜனாதிபதி பேசியது மத்திய அரசின் எண்ணத்தை மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்து உள்ளது.
அதேசமயம் ஒரு நீதிபதியின் வீட்டில் பல கோடி ரூபாய் பணம், கட்டுக்கட்டாக கைப்பற்றப்பட்டது குறித்தும், அந்த விஷயத்தை ஒரு வாரம் வரை மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்காதது, குறித்தும், அந்த நீதிபதி மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும், எப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டே முடிவு செய்ததையும் துணை ஜனாதிபதி சுட்டிக்காட்டியது நாடு முழுவதும், சுப்ரீம் கோர்ட் செய்தது சரியா? தவறா? என விவாதங்களை உருவாக்கி உள்ளது.
இதற்கு முன்னர் மத்திய அரசின் உச்ச அதிகாரத்தில் இருந்த யாரும், சுப்ரீம் கோர்ட்டுக்கு எதிராக இப்படி ஒரு கடும் விமர்சனத்தை முன்வைத்ததே இல்லை. இனி வரும் பார்லிமெண்ட் கூட்டத்தொடரில் பல சட்டத்திருத்தங்களை செய்யவும், சுப்ரீம் கோர்ட்டின் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் வகையில் பல திருத்தங்களை செய்யவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சுப்ரீம் கோர்ட் தனது அதிகாரத்தை மீறி செயல்படுவதாகவும், அதற்கு கடிவாளம் போட்டே ஆக வேண்டும் எனவும் மத்திய அரசு முடிவு செய்து விட்டது என்பதை அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகள் மிக, மிக துல்லியமாக வெளிப்படுத்தி வருகின்றன.
இதனால் தான் தமிழக கவர்னர் விஷயத்தில் மத்திய அரசு இன்னும் எந்த நடவடிக்கை எடுப்பது குறித்தும் முடிவு செய்யாமலேயே உள்ளது. இப்போது கூட தமிழக கவர்னர் டெல்லியில் தான் இருக்கிறார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடனும், பிரதமர், ஜனாதிபதியுடனும் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை என்ன மாதிரி முடிவுக்கு வரும் என்பது தெரியவில்லை.
சுப்ரீம்கோர்ட் தனக்கு எதிரான நடவடிக்கையில் என்ன முடிவு எடுப்பது என கவர்னர் மத்திய அரசுடன் ஆலோசித்து வருகிறார். இல்லை.. இல்லை… ஆலோசிக்கவும், அதனை எப்படி எதிர்கொள்வது என முடிவு செய்யவும் தான் மத்திய அரசுதான் கவர்னரை டெல்லிக்கு அழைத்துள்ளது.
இந்த விஷயத்தில் மத்திய அரசு நிதானம் காட்டினாலும், விட்டுக்கொடுக்காது என்பது மட்டும் தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. அப்படி மத்திய அரசு சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு எதிரான நடவடிக்கை எடுத்தால், அதிகார மோதல் வெளிப்படையாக தொடங்கி விட்டது என புரிந்து கொள்ளலாம்.
உள்ளுக்குள் இருக்கும் புகைச்சலை மத்திய அரசு வெளிப்படுத்தத் தொடங்கி விட்டது என்றே புரிந்து கொள்ளலாம். ஒரு வேளை மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல், அதன் வழிகாட்டுதலை பின்பற்றத் தொடங்கி விட்டால், சுப்ரீம் கோர்ட் அதிகாரத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு திரைமறைவில் உறுதியான வலைபின்னலை தொடங்கி விட்டது என்றும் புரிந்து கொள்ளலாம்.
ஆக தெள்ளத்தெளிவாக ஒரு விஷயம் புரிகிறது. மத்திய அரசுக்கும், சுப்ரீம் கோர்ட்டுக்கும் இடையே அதிகார மோதல் தொடங்கி விட்டது. இந்த சிக்கல் எப்படியெல்லாம் பயணிக்குமோ தெரியவில்லை என மக்கள் மத்தியி்ல் ஒரு வித பதட்டம் உருவாகி விட்டது என்பது உண்மையே.
– மா.பாண்டியராஜ்.