‘மோடிக்குப் பிறகு பிரதமர் பதவிக்கு வரப்போவது யார்?’ என்பது குறித்த கேள்வியும் விவாதமும் கிளம்பி உள்ளது. ‘உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரதமராக வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது’ என்கிற பேச்சு கடந்த சில ஆண்டுகளாகவே நிலவுகிறது.
‘பிரதமர் மோடிக்கு 75 வயது ஆவதால், அவர் ஓய்வு பெறப்போகிறார்’ என்ற செய்தி நாடு முழுவதும் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. அதேபோல, ‘பிரதமர் பதவியிலிருந்து மோடி விலகினால், அடுத்த பிரதமராக வரப்போகிறவர் யார்?’ என்ற கேள்வியும் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது!
நாக்பூரிலுள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்துக்கு பிரதமர் மோடி மார்ச் 30-ம் தேதி சென்றதையொட்டி, ‘பிரதமர் பதவியிலிருந்து மோடி ஓய்வுபெறப்போகிறார். அது குறித்து தெரிவிக்கத்தான் ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்துக்கு அவர் சென்றார்’ என்று ஒரு செய்தியைக் கொளுத்திப்போட்டார் சிவசேனா (உத்தவ்) எம்.பி-யான சஞ்சய் ராவத்.
2014-ம் ஆண்டிலிருந்து பிரதமராக இருந்துவரும் மோடி, கடந்த 11 ஆண்டுகளில் இப்போதுதான் முதன்முறையாக ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்துக்குச் சென்றிருக்கிறார். எனவே, பிரதமர் மோடியின் ஓய்வு குறித்து சஞ்சய் ராவத் தெரிவித்த தகவல் முக்கியத்துவம் பெற்றது.
பா.ஜ.க-வில் 75 வயதைக் கடந்தவர்களால், அரசின் முக்கியப் பதவிகளில் இருக்க முடியாது என்ற நடைமுறை இருந்து வருகிறது. அதனால் தான், பா.ஜ.க-வின் மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுமித்ரா மகாஜன் உள்ளிட்ட தலைவர்கள் 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை.
வரும் செப்டம்பர் 17-ம் தேதி, பிரதமர் மோடிக்கு 75 வயது நிறைவடையப்போகிறது. இந்த நிலையில் தான், தனது ஓய்வு குறித்து ஆர்.எஸ்.எஸ் தலைவர்களிடம் தெரிவித்துவிட்டு, பதவி விலகல் தொடர்பான அறிவிப்பை மோடி வெளியிடுவார் என்று சொல்லப்பட்டது.
இந்தச் சூழலில், ‘மோடிக்குப் பிறகு பிரதமர் பதவிக்கு வரப்போவது யார்?’ என்பது குறித்த விவாதமும் கிளம்பியது. ‘உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரதமராக வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது’ என்கிற பேச்சு கடந்த சில ஆண்டுகளாகவே நிலவுகிறது. அவர் தவிர, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்துறை அமைச்சர் நிதின் கட்கரி, மத்திய வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் ஆகியோரது பெயர்களும் பிரதமர் பதவிக்கு அடிபடுகின்றன.
ஆனால், ‘மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒருவர் தான் அடுத்து பிரதமராக வரக்கூடும்’ என்கிறார் சஞ்சய் ராவத்.
ஆனால், இந்தச் செய்திகள் அனைத்தையும் ‘அடிப்படை ஆதாரமற்ற தகவல்’ என்று ஆர்.எஸ்.எஸ் மறுத்திருக்கிறது. அதேபோல, பா.ஜ.க-வும் மறுப்பு தெரிவித்திருக்கிறது. உடனே, ‘எல்.கே.அத்வானி, முரளிமனோகர் ஜோஷி போன்றவர்களுக்கு ஒரு நீதி, மற்றவர்களுக்கு வேறொரு நீதியா..?’ என்ற கேள்வியைச் சிலர் எழுப்புகிறார்கள்.
இந்த விவகாரம் குறித்து, அரசியல் விமர்சகர் நித்யானந்தம் கூறியதாவது: “75 வயதைக் கடந்தவர்கள் பிரதமராகவோ, அமைச்சராகவோ இருக்கக் கூடாது என்று பா.ஜ.க-வில் விதி எதுவும் இல்லை. 75 வயதைக் கடந்த ஒருவருக்கு உடல் ஒத்துழைக்கவில்லை என்றால், அவருக்கு ஓய்வு கொடுப்பது தான் நல்லது. ஆனால், பிரதமர் மோடி செயல்படும் வேகத்தைப் பார்த்தால், அவருக்கு 75 வயதாகி விட்டதா என்கிற சந்தேகம் தான் எழுகிறது.
அவர் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கிறார். எனவே, பிரதமர் பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. அவர் தானாக முன்வந்து பதவி விலகாத வரையில், யாராலும் அவரை விலக்க முடியாது.
முத்தலாக் தடைச் சட்டம், பிரிவு 370 நீக்கம், வக்போர்டு சொத்துக்கள் திருத்தச்சட்டம் என… தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ்.,சின் பல செயல் திட்டங்களைச் சிறப்பாக மோடி செயல்படுத்திவருகிறார். அடுத்து பொதுசிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டங்கள் மோடியால் நிறைவேற்றப்பட உள்ளது. இதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கி விட்டன.
மேலும், ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தில் அவர் மிகச் சரியாக இருக்கிறார். அப்படி இருக்கும்போது, பதவி விலகல் என்ற பேச்சுக்கே இடமில்லை. அடுத்த பிரதமர் யார் என்று யோசிப்பதற்கான நேரம் இன்னும் வரவில்லை. ‘உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் அடுத்த பிரதமராக வரலாம்’ என்று சிலர் சொல்கிறார்கள். வாஜ்பாய்க்குப் பிறகு அத்வானி தான் என நீண்ட காலமாகச் செல்லப்பட்டது. ஆனால், அது என்னவாயிற்று…? எனவே, வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்” என்கிறார் நித்யானந்தம்.
இந்த விவகாரம் குறித்து, மாற்றுக்கட்சியினரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பேராசிரியர் அருணன் கூறியதாவது:“கடந்த 11 ஆண்டுகளாக பிரதமராக இருந்து வரும் மோடி, ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளைத் தீவிரமாகப் பின்பற்றுவதுடன், அதன் செயல் திட்டங்களைத் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார்.
எனவே, பா.ஜ.க ஆட்சியில் வேறு யார் பிரதமராக வந்தாலும், ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்குக் கட்டுப்பட்டவராகத் தான் அவரும் இருப்பார். யோகி ஆதித்யநாத், நிதின் கட்கரி என யார் வேண்டுமானாலும் பிரதமராக வரலாம். எனவே, பிரதமர் பதவிக்கான மோதல் உள்ளுக்குள் நடைபெற வாய்ப்பிருக்கிறது. செப்டம்பர் வரும் போது அது வெளியே தெரிய வரும்.
‘75 வயதைக் கடந்துவிட்டீர்கள்’ என்று சொல்லித்தான் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட பல தலைவர்களை வெளியேற்றினார்கள். அவர்கள் வெளியேற மனமின்றி, மனம் வெதும்பித்தான் வெளியேறினார்கள். இப்போது, மோடிக்கு மட்டும் விதிவிலக்கு என்று சொன்னால், அந்த விதிக்கு என்ன மரியாதை… எனவே, பா.ஜ.க-வுக்குள் புகைச்சல் எழுந்திருப்பது உண்மைதான்” என்கிறார்.