டெல்லியில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ஆளுநருக்கு எதிரான தீர்ப்பு வெளியான நிலையில் அவர் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் நிலுவையில் வைத்திருந்ததை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் அமர்வு கடந்த 8ம் தேதி தீர்ப்பளித்தது.
மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் எனக் கூறிய நீதிபதிகள், குடியரசுத் தலைவருக்கு மசோதாக்கள் அனுப்பியதை ரத்து செய்தும், சட்டப்பிரிவு 142-ன் கீழ் உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தியும் 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்தனர். இந்த தீர்ப்பு மாநில அரசிற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி என சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்தான் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அரசு முறை பயணமாக மூன்று நாள் டெல்லி சென்றுள்ளார். இந்தப் பயணத்தில் அவர், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவையும் சந்திக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதனிடையே நேற்று குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கரை ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திதுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை குடியரசு துணைத் தலைவர் கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியலைமைப்பில் நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பிரிவு 142ஐ ஜனநாயக சக்திகளுக்கு எதிரான அணு ஏவுகணையை போல் உச்ச நீதிமன்றம் பயன்படுத்துகிறது. அரசியலமைப்பின் அதிகாரத்தை மறந்து குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், அரசியலமைப்பின் 145வது பிரிவை எடுத்துரைப்புதுதான் நீதிபதிகளுக்கு இருக்கும் ஒரே உரிமை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த சந்திப்பின் போது உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து ஆலேசாசனை நடைபெறும் என்றும் அடுத்தக்கட்ட சட்ட நடவடிக்கை என்ன என்பதும் ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் தமிழ்நாட்டு அரசியல் சூழல் குறித்தும் ஆளுநர் ஆர்.என்.ரவி எடுத்துரைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.