இனிமேல் புதிய பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பிறப்பு சான்றிதழை கட்டாயம் சமர்ப்பிக்கவேண்டும் என்கிற புது விதிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு பாஸ்போர்ட்டுகளுக்கு புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது. ஆகையால், பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் இதை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
பிற நாடுகளுக்குப் பயணம் செய்ய பாஸ்போர்ட் அவசியம். இப்போதெல்லாம், பலர் தங்கள் சொந்த பாஸ்போர்ட்களைப் பெறுகிறார்கள். ஏனென்றால் எப்போது வாய்ப்பு வரும் என்று யாருக்கும் தெரியாது. குறிப்பாக வேலையைப் பொறுத்தவரை, பல சந்தர்ப்பங்களில் பாஸ்போர்ட் வைத்திருப்பது கட்டாயமாகிவிட்டது.
ஆனால், இன்னும் பாஸ்போர்ட் எடுக்காதவர்கள் இந்த விஷயத்தை தெரிந்து கொள்ளுங்கள். மத்திய அரசு சமீபத்தில் பாஸ்போர்ட் விதிகளில் மாற்றங்களைச் செய்துள்ளது. குறிப்பாக பிறந்த தேதி தொடர்பாக புதிய மாற்றங்களை செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
பிறப்புச் சான்றிதழ் அவசியம்
பொதுவாக, அனைத்து இடங்களிலும் பிறப்புச் சான்றிதழ் மட்டுமே ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆதாரமாக உள்ளது. இந்த நிலையில், மத்திய அரசு ஒரு புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் கீழ் அக்டோபர் 1, 2023 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்கள் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க பிறப்புச் சான்றிதழை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். பிறந்த தேதியை நிரூபிக்க முன்னர் பல ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், இனிமேல் இந்த குறிப்பிட்ட தேதிக்குப் பிறகு பிறந்தவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.