இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கே. கஸ்தூரிரங்கன் (84), பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் இன்று காலமானார்.
இவரது மறைவு குறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் :-
இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கே. கஸ்தூரிரங்கன் (84), காலை 10.43 மணிக்கு காலமானார். பெங்களூருவில் உள்ள ராமன் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஏப்ரல் 27ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் நண்பகல் வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்படும்.
அவர் ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரோ, விண்வெளி ஆணையம் மற்றும் விண்வெளித் துறைக்கு தலைமை தாங்கினார். ஆகஸ்ட் 27, 2003 அன்று அவர் பதவியில் இருந்து விலகினார். தேசிய கல்விக் கொள்கையில் பட்டியலிடப்பட்டுள்ள கல்வி சீர்திருத்தங்களுக்குப் பின்னால் இருந்தவர் என்று அறியப்படும் கஸ்தூரிரங்கன், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும், கர்நாடக அறிவு ஆணையத்தின் தலைவராகவும் பணியாற்றினார். 2003 முதல் 2009 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும், அப்போதைய இந்திய திட்டக் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றினார்.
அவர் இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தின் இயக்குநராகவும் பணியாற்றினார். அங்கு அவர் INSAT-2, IRS-1A/1B மற்றும் அறிவியல் செயற்கைக்கோள்களை உருவாக்குவதில் ஈடுபட்டார். இந்தியாவின் முதல் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள்களான “பாஸ்கரா I” மற்றும் “II” ஆகியவற்றின் திட்ட இயக்குநராக இருந்த அவர், PSLV மற்றும் GSLV ஏவுதல்கள் போன்ற முக்கிய மைல்கற்களை மேற்பார்வையிட்டார். அவரது பங்களிப்புகளுக்காக அவருக்கு பத்மஸ்ரீ, பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.