காஷ்மீரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு, கனவிலும் நினைத்துப் பார்க்காத அளவிற்கு தண்டனை வழங்கப்படும் என்று பிகாரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்கமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாதத் தாக்குதல் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது, அட்டாரி-வாகா எல்லை மூடல் என அதிரடி முடிவுகளை மத்திய அரசு எடுத்தது. மேலும், சார்க் கூட்டமைப்பு நாட்டினருக்கான விசா பெற்று இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள், 48 மணிநேரத்தில் நாட்டை விட்டு வெளியேற கெடு விதிக்கப்பட்டது.
இந்நிலையில் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை ஒட்டி, பிகார் மாநிலம் மதுபானியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதில், பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 1 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
வழக்கமாக இந்தியில் மட்டுமே பேசும் பிரதமர் மோடி, பஹல்காம் தாக்குதல் குறித்து ஆங்கிலத்தில் உரையாற்றினார். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் விட மாட்டோம் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
மனிதாபிமானத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைவரும் தங்களுடன் இருப்பதாக கூறிய பிரதமர் மோடி, 140 கோடி இந்தியர்களின் மன உறுதி, பயங்கரவாதத்தை அழிக்கும் என்று குறிப்பிட்டார்.
அட்டாரி – வாகா எல்லை மூடப்பட்டுள்ளதால், பாகிஸ்தானில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை பார்க்கலாம்.
1. வர்த்தகத்தில் தாக்கம்:
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சாலை வர்த்தகத்திற்கு அட்டாரி – வாகா எல்லை ஒரு முக்கிய மையமாக உள்ளது. 2019 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு ‘மிகவும் விரும்பப்படும் நாடு’ (Most Favoured Nation) என்ற அந்தஸ்தை இந்தியா திரும்பப் பெற்று வர்த்தக உறவுகளை துண்டித்தது. இதன் பிறகும், சில பொருட்கள் (பழங்கள், சிமென்ட் மற்றும் தக்காளி போன்றவை) இந்த எல்லை வழியாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்பட்டது. இந்த சோதனைச் சாவடி தற்போது மூடப்படுவது பாகிஸ்தானின் தக்காளி, சர்க்கரை, தேயிலை மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியைப் பாதிக்கும். இதனால் அங்கு இந்த அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
2. பாகிஸ்தானில் உயிர்காக்கும் மருந்துகளின் பற்றாக்குறை:
2019 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் இந்தியாவுடனான வர்த்தக உறவை முறித்துக் கொண்டபோது, அங்கு உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் மூலப்பொருட்களின் பற்றாக்குறை ஏற்பட்டது. தற்போது அட்டாரி சோதனைச் சாவடி மூடப்பட்டதால் இந்தப் பிரச்சினை மீண்டும் எழக்கூடும். இதனால் பாகிஸ்தானுக்கு பெரும் இழப்பு இருக்கக்கூடும் என்ற கருத்து உள்ளது.
3. பாகிஸ்தானின் ஏற்றுமதி பாதிப்பு:
பாகிஸ்தானின் பழங்கள் (கொய்யா, மாம்பழம், அன்னாசிப்பழம்), சிமென்ட், தோல் மற்றும் மசாலாப் பொருட்கள் போன்றவை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. சோதனைச் சாவடி மூடப்படுவதால் இந்தப் பொருட்களின் ஏற்றுமதி நிறுத்தப்படலாம், இது பாகிஸ்தானின் வர்த்தகர்களுக்கும் பொருளாதாரத்திற்கும் பின்னடைவை ஏற்படுத்தும்.
4. மக்கள் பயணம் செய்ய முடியாது:
இரு நாட்டு மக்களும் அட்டாரி – வாகா எல்லை வழியாக ஒருவருக்கொருவர் தங்கள் நாட்டிற்கு பயணம் செய்கிறார்கள், குறிப்பாக பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூர் சாஹிப் போன்ற குருத்வாராக்களுக்கு வருகை தரும் சீக்கிய யாத்ரீகர்கள் இந்த பாதை மூலமாக தான் பயணம் செய்கிறார்கள். இந்த சோதனைச் சாவடி மூடப்பட்டதால் பக்தர்கள் பாதிக்கப்படுவார்கள். இருப்பினும், இது குறித்து இன்னும் அரசாங்கம் முழுமையாக தெளிவுபடுத்தவில்லை. 2019 இல் சம்ஜௌதா மற்றும் தார் எக்ஸ்பிரஸ் போன்ற ரயில் வழித்தடங்கள் மூடப்பட்ட பிறகு, பலர் தங்கள் குடும்பங்களைச் சந்திக்க மாற்று அல்லது விலையுயர்ந்த வழிகளை (விமானப் பயணம் போன்றவை) நாட வேண்டியிருந்தது. சோதனைச் சாவடி மூடப்பட்டதால் இந்தப் பிரச்சினை மீண்டும் எழக்கூடும்.
5. பாகிஸ்தானின் பொருளாதாரத்தில் தாக்கம்:
பாகிஸ்தான் ஏற்கனவே பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. இந்தியாவுடனான வர்த்தகத்தை நிறுத்துவது அதன் பொருளாதாரத்தில் மேலும் சுமையை ஏற்படுத்தும். 2019 இல் வர்த்தகம் நிறுத்தப்பட்ட பிறகு, பாகிஸ்தான் வேறு நாடுகளிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டியிருந்தது. இது அந்நாட்டின் செலவை மேலும் அதிகரிக்கும்.
6. பாகிஸ்தானில் வேலை இழப்பு:
இரு நாடுகளைச் சேர்ந்த பலர் (மூட்டை தூக்குபவர்கள், லாரி ஓட்டுநர்கள் மற்றும் கடைக்காரர்கள் போன்றவர்கள்) அட்டாரி – வாகா எல்லையில் வேலைவாய்ப்பை நம்பியுள்ளனர். சோதனைச் சாவடி மூடப்படுவது இந்த மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும். இதுபோன்ற பாதிப்புகள் பாகிஸ்தானில் பணவீக்கத்தை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாக்.ஏவுகணை சோதனை :
இந்த நிலையில், பாகிஸ்தான் கராச்சி கடற்கரையில், தனது பொருளாதார மண்டலத்திற்குள் ஏப்ரல் 24-25 தேதிகளில் ஏவுகணை சோதனை நடத்துவதற்கு பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பஹல்காம் தாக்குதலையடுத்து, மத்திய அரசு அமைச்சரவை கூட்டத்தில் எடுத்த முக்கிய முடிவுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் இந்த ஏவுகணை சோதனையை நடத்துகிறது.
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை நடத்துகிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளதால், இந்தியா அதன் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆலோசனை கூட்டம்
பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்றுமுன்தினம் மாலை நடைபெற்றது. டெல்லியில் பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைத் தளபதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது, காஷ்மீரில் பாதுகாப்பு நிலைமை குறித்து ஆலோசிக்கப்பட்டது. பாதுகாப்பு படைகளை தயார் நிலையில் இருக்க அறிவுறுத்துவதுடன், தாக்குதலுக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவும், அவர்களுக்கு ஆதரவளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முடிவெடுக்கப்பட்டது.
சுமார் இரண்டரை மணி நேரம் நீடித்த இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாகிஸ்தானுடன் 1960 ஆம் ஆண்டு போடப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.