டெல்லி தலைமைச் செயலகத்தில் இருந்து ஆவணங்கள், கோப்புகள் வெளியே செல்லக் கூடாது எப்பிற்று துணைநிலை ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
டெல்லியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து, தலைமைச் செயலகத்தில் இருந்து எந்த கோப்பபுகளையும், ஆவணங்களையும் வெளியே எடுத்துச்செல்லக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டெல்லி துணைநிலை ஆளுநரான வீ,கே.சக்சேனா உத்தரவின்படி, பொதுநிர்வாகத்துறை சார்பில் அனைத்துத்துறைகளுக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எந்த முன் அனுமதியும் இல்லாமல், அனைத்துத்துறைகள், ஏஜென்சிகள், அரசு நிர்வாக மையங்களில் இருந்து எந்தக் கோப்புகளையும், ஆவணங்களையும் கம்ப்யூட்டர்களையும் தலைமைச்செயலகத்துக்கு வெளியே எடுத்துச் செல்லக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டெல்லி தலைமைச் செயலகத்தில் உள்ள அனைத்துத்துறை பொறுப்பாளர்களும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பு போலவே தலைமைச்செயலகம் செயல்படும் என்றும், அதில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆவணங்கள், அலுவலக கோப்புகள், பதிவுகள், தரவுகள், மடிக்கணினிகள், கம்ப்யூட்டர்கள் போன்றவற்றை யாரும் வெளியே எடுத்துச்செல்வதோ, வெளியே அனுப்புவதோ கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
ஆட்சி மாற்றம் ஏற்பட்ட சில நிமிடங்களில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிகிறது. ஆம் ஆத்மி கட்சி ஆட்சி இழந்து, பாஜக ஆட்சி அமைக்கவுள்ள நிலையில் இந்த உத்தரவு அரசியல் களத்தில் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.