‘எனக்கு அறிவிக்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை, என் பேரில் உள்ள இன்னொருவர் வாங்கிச்சென்று விட்டார்’ என்று தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஒடிசா உயர்நீதிமன்றம், வருகிற 24-ம் தேதி இருவரையும் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது பெற்றவர்களின் பட்டியலில், ஒடிசாவைச் சேர்ந்த `ஸ்ரீ அந்தர்யாமி மிஸ்ரா’ என்ற பெயர் 56-வது இடத்தில் இடம்பெற்று இருந்தது. இலக்கியம் மற்றும் கல்விக்கான அவரது பங்களிப்புக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, அந்தர்யாமி மிஸ்ரா டெல்லிக்கு சென்று குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவிடமிருந்து விருதைப் பெற்றுள்ளார். இதற்கிடையே, தன்னைப் போல ஆள்மாறாட்டம் செய்து விருதை ஒருவர் பெற்றுள்ளார் என்று இன்னொரு அந்தர்யாமி மிஸ்ரா ஒடிசா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
மனுதாரர் புவனேஸ்வரில் வசிக்கிறார். இவர், மருத்துவர் மற்றும் எழுத்தாளர். வெவ்வேறு மொழிகளில் 29 புத்தகங்களை எழுதியுள்ளார். அவருக்கு பதிலாக, விருதை பெற்றுக்கொண்டவரோ ஒரு முன்னாள் பத்திரிகையாளர். இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
உண்மையில் விருதை பெற்றுக்கொண்ட அந்தர்யாமி, தென்கானல் மாவட்டத்தில் வசிக்கிறார். அவர் கூறுகையில், “எனக்கு இந்த வழக்கை பற்றித் தெரியாது. எனக்கு விருது வழங்க, ஒடிசாவில் இருந்து பலரும் பரிந்துரை வழங்கியிருந்தனர். ஆந்திர முன்னாள் கவர்னர் விஸ்வபூஷன் ஹரிச்சரண் கூட எனக்கு பரிந்துரை செய்திருந்தார். விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதற்கான அரசின் கடிதம், என் வீட்டு முகவரிக்கு வந்திருந்தது,” என்றார்.
ஆனால், வழக்கு தொடர்ந்த அந்தர்யாமியின் வழக்கறிஞர் கூறுகையில், “பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட உடன், மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து எனது கட்சிக்காரருக்கு போனில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.கே. பானிக்ரஹி, அரசாங்கத்தால் கடுமையான சரிபார்ப்பு செயல்முறை இருந்தபோதிலும், ஒரே மாதிரியான பெயர்கள் காரணமாக ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது தேர்வு செயல்முறையின் நம்பகத்தன்மை குறித்து கவலைகளை எழுப்பி உள்ளது.’ என்று தெரிவித்தார்.
இரு தரப்பினரும் ஆதாரங்களுடன், பிப்ரவரி 24-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு ஒடிசா உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதை விசித்திர வழக்கு என்று நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.