மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், தொடங்கி வைத்தார்
தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி விழிப்புணர்வு பேரணியை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் எடுத்த நடவடிக்கையின் அடிப்படையில், கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் 2023-யினை தமிழ்நாட்டில் நடத்துவதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் 2023-ம் ஆண்டு கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியினைத் தமிழ்நாட்டில் மிகச் சிறப்பாக நடத்திட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுப் மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் – 2023 தமிழ்நாட்டில் உள்ள சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய நான்கு நகரங்களில் ஜனவரி 19, 2024 முதல் ஜனவரி 31, 2024 வரை நடைபெற உள்ளது. இப்போட்டியினை ஊக்குவிக்கும் வகையில் தமிழகத்தின் 4பெரு நகரங்களில் இருந்து கேன்டர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த 4 பெரு நகரங்களில் இருந்து வரப்பெற்ற கேண்டர்கள் அனைத்து மண்டலங்கள் வாரியாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்னையை நோக்கிய பயணமாக வந்த வண்ணம் உள்ளன.
இந்நிகழ்வினை மேற்கொண்டு திருவண்ணாமலை மாவட்டத்திற்கு ஜனவரி 14, 2024 அன்று இக்கேண்டர்கள் வந்தடைய உள்ளன.இந்த கேன்டர் மூலம் வரப்பெறும் ஜோதியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றும் அவர்களின் தலைமையில் இதனை திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் பேரணியாக கொண்டு செல்லுவதை முன்னிட்டும் தேசிய அளவிலான போட்டிகளை ஊக்குவிக்கும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இடையே பேச்சுப் போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டிகள் ஜன-10, 2024 முதல் ஜன- 11, 2024 வரை பள்ளி மற்றும் கல்லூரியில் நடைபெற்றன.
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் 2023 குறித்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவ மாணவிகளின் பேரணியை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து அண்ணா நுழைவு வாயில் வரை மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் நடைபெற்றது.
மேற்காணும் அனைத்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஜனவரி 14, 2024 அன்று மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர், அனைத்து பாராளுமன்ற உறுப்பினர், அனைத்து சட்டமன்ற உறுப்பினர், அரசு அலுவலர்கள் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரமுகர்களின் தலைமையில் பாரட்டுச்சான்றிதழ் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட உள்ளன.