திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த, எலத்தூர் – மோட்டூர் – நட்சத்திர கோயில், சிவசுப்பிரமணியர் ஆலய ஆடிக்கிருத்திகை பெருவிழா ஆலோசனை கூட்டம், வட்டாச்சியர் அலுவலகத்தில் பெ.சு.தி.சரவணன் எம்.எல்.ஏ, தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் அவர் பேசியதாவது :
பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான, குடிநீர், கழிவறை, சாலை வசதிகள் ஆகியவற்றை மிகுந்த கவனத்துடன் செயல்படுத்த வேண்டும். கிரிவல பாதையை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். விளக்கு வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.
பாதுகாப்பிற்கு வரும் அரசு அலுவலர்கள், காவல் துறையினருக்கு, குடிநீர், உணவு வசதிகள் சிறப்பாக அமைத்து தர வேண்டும். தீயனைப்பு வாகனம் தயார் நிலையில் இருக்க வேண்டும், மருத்துவ முகாம் அமைக்க வேண்டும்,தற்காலிக கழிவறைகள் அங்கங்கே வைக்க வேண்டும்.
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பரிந்துரையின் படி, அன்னதான கூடம் அமைக்க அனுமதி கிடைத்துள்ளது. விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும். அனைத்து துறை அதிகாரிகள், மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி விழா சிறப்பாக அமைய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில், வட்டாச்சியர் ராஜராஜேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாமலை, காவல் துறை, இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள், ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன், துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் சிவக்குமார், வழக்கறிஞர் சுப்பிரமணியன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பச்சையப்பன், மற்றும் அனைத்து துறை அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர், அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.