பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி
புதுச்சேரியில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆய்வு மேற்கொண்டார். பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி.
புதுச்சேரியின் பிரதான தொழிலாக இருப்பது விவசாயம். புதுச்சேரிக்கு என்று தனி ஆறோ, அணையோ கிடையாது. நிலத்தடி நீரை மட்டுமே புதுச்சேரி விவசாயிகள் நம்பியுள்ளனர். இதனை உணர்ந்து பிரெஞ்சு ஆட்சி காலத்தில் புதுச்சேரியின் கிராமங்களில் ஏராளமான ஏரிகள் உருவாக்கப்பட்டன.
மிகப் பெரிய உபரி நீர் ஏரியான ஊசுடு ஏரி, பாகூர் ஏரி உட்பட 90-க்கும் மேற்பட்ட ஏரிகளை உருவாக்கி நீர் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஏரிகள் நிரம்பினால் அவை கடலுக்கு செல்வதற்கும் வழி ஏற்பாடு செய்யப்பட்டது.
இவைகளை முறையாக பயன்படுத்தாததால் மண்ணாடிப்பட்டு தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களான கைக்கலப்பட்டு, சுத்து கேணி, கொடாத்தூர் மற்றும் அதன் சுற்றுபகுதிகளில் 300 க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. தொடர் மழையின் காரணமாக தற்போது 300 ஏக்கரில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இங்கு சீரக சம்பா, பொன்னி, பொன்மணி பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் தற்போது நீரில் மூழ்கி உள்ளது.
மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், உள்துறை அமைச்சருமான நமச்சிவாயம் நேரில் சென்று ஆய்வு செய்து விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.
அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் பேசுகையில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களில் அனைத்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்துள்ளோம். பாதிக்கப்பட்ட விளை நிலங்களை கணக்கெடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சர் இடம் பேசி இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு கேள்விக்கு பதில் அளிக்காதது ஏன் என்று கேட்ட கேள்விக்கு உரிய நேரத்தில் உரிய பதில் அளிக்கப்படும் என்றார்.