காட்பாடியில் கிருபானந்த வாரியாரின் குரு பூஜையை முன்னிட்டு, அவரது சிலைக்கு அமைச்சர் துரைமுருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். வேலூர் மாவட்டம், காட்பாடியில் ஆன்மிக சொற்பொழிவாளர் திருமுருக கிருபானந்த வாரியாரின் குரு பூஜையை முன்னிட்டு, தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி, காட்பாடி ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன், மண்டல குழு தலைவர் புஷ்பலதா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், மழைகாலங்களில் பூண்டி மற்றும் புழல் ஏரிகளில் நீர் நிரம்பினால் முன் எச்சரிக்கையாக நீர்தேங்காமல் இருக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் சொல்லி தான் அகற்றுகிறோம். அதே நீதிமன்றம் மாற்று இடம் அவர்களுக்கு கொடுக்க சொல்கிறது. மாற்று இடம் வழங்கி வருகிறோம். ஏரிகளில் விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதித்து வருகிறோம். ஆங்காங்கே முறைகேடுகள் நடக்கிறது என்றார். சாலைகள் மழையால் பாதிக்கப்பட்டது குறித்து கேட்ட போது அவர் பதிலளிக்கவில்லை. மேலும் எதிர்க்கட்சித்தலைவர் பழனிசாமி திமுகவின் செல்வாக்கு சரிவது குறித்து கேட்டதற்கு, எதிர்க்கட்சிகாரர் அப்படி தான் கூறுவார். அவரின் எதிர்க்கட்சித்தலைவர் செயல்பாடு எப்படி இருக்கிறது என அவர் தான் கூற வேண்டுமென தெரிவித்தார்.