திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு விடுதியில் தங்கி பள்ளிப் பயிலும் மாணவியர்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மூலமாக முழு உடல் பரிசோதனை மற்றும் ஹிமோகுளோபின் பரிசோதனை நேற்று நடைபெற்றதை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவிகளை தேர்ந்தெடுத்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு விடுதியில் தங்கி திருவண்ணாமலையில் உள்ள வீடிஎஸ் பள்ளியில் 97 மாணவியர்கள் 7-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர்.
விளையாட்டு விடுதியில் தடகள பிரிவில் 19, கூடைப்பந்து 23, கைப்பந்து 29 மற்றும் ஹாக்கி பிரிவில் 28 என 97 மாணவியர்களுக்கு விளையாட்டு பயிற்சியுடன் பள்ளி பயின்று வருகின்றனர்.
தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் பல்வேறு விளையாட்டு பயிற்சிகள் பயிற்றுநர்கள் மூலமாக பயிற்சிகள் வழங்கப்படுகிறது. மாணவியர்களுக்கு தங்கும் வசதியுடன் சத்தான உணவுகள் தினமும் வழங்கப்படுகிறது.
மாணவிகளின் உடல் நலத்தைக் காக்கும் வகையில் திருவண்ணாமலை மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மூலமாக மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மருத்துவர்கள் மூலமாக முழு உடல் பரிசோதனை மற்றும் ஹிமோகுளோபின் பரிசோதனை செய்யப்பட்டது.
அதனை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கரபாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு மாணவிகளுக்கு செய்யப்படும் பரிசோதனைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும் மருத்துவ பரிசோதனையின் முடிவில் உடல்நல பிரச்சினைகள் மற்றும் ஹிமோகுளோபின் குறைவாக இருக்கும் மாணவிகளுக்கு ஆறு மாதங்களுக்கு மாத்திரைகளை வழங்கப்பட்டு கண்காணிக்கப்படும் பின்பு மீண்டும் ஆறு மாதங்களுக்கு பிறகு மாணவிகளுக்கு உடல் நலன் முன்னேற்றம் குறித்து முழு பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
இம்முகாமில் மண்டல முதுநிலை மேலாளர் நோயலின் ஜான், விடுதி மேலாளர் சண்முகப்பிரியா மற்றும் மருத்துவ குழுவினர் உடனிருந்தனர்.