காட்பாடியில் கல்லூரி மாணவர்களை நோட்டமிட்டு லேப்டாப்புகளை திருடிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த ஆண்டாள் நகர் பகுதியை சேர்ந்தவர் அஸ்வத்தாமன். இவர் அதே பகுதியில் தனியாக வாடகை வீடு எடுத்து தனியார் பல்கலைகழகத்தில் பிஎச்டி பயின்று வருகிறார்.
இந்த நிலையில் இவர் கடந்த 10 ஆம் தேதி ஆயுத பூஜை விடுமுறைக்காக தனது சொந்த ஊரான மதுரைக்கு சென்றுள்ளார். விடுமுறை முடிந்து கடந்த 13-ஆம் தேதி இவர் வீட்டிற்கு திரும்ப வந்த போது வீட்டீன் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக உள்ளே சென்று பார்த்தபோது, தனது படிப்பிற்காக பயன்படுத்தி வந்த லேப்டாப் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து அருகே உள்ள காட்பாடி காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார்.
புகாரின்பேரில் காட்பாடி காவல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை காட்பாடி உதவி ஆய்வாளர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் மதிநகர் அருப்பு மேடு சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரை நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் வைத்திருந்த பேகில் லேப்டாப் இருப்பதை பார்த்து விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அவர்களிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையில் காட்பாடியில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு லேப்டாப்ளை மட்டும் குறி வைத்து திருடியது விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து காட்பாடி போலீசார் காட்பாடி கிருஷ்ணன் பேட்டை அருள் நகர் பகுதியைச் சேர்ந்த குமரன் (35) காட்பாடி அருப்புமேடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் (40) காட்பாடி காந்தி நகர் பகுதியில் சேர்ந்த முரளி (36) மூன்று பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 2.5 லட்சம் மதிப்புள்ள ஏழு லேப்டாப்புகள் ஒரு கம்ப்யூட்டரை பறிமுதல் செய்து காட்பாடி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.