தமிழகத்தில், புதிய விமான நிலையங்களை உருவாக்க உள்ளோம். தஞ்சாவூர் உட்பட பல நகரங்களில் விமான நிலையங்கள் வர உள்ளன. லட்சக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு, தரமான வேலை வாய்ப்பை உருவாக்கி தர உள்ளோம்,” என தொழில் துறை அமைச்சர் ராஜா கூறினார்.
அமைச்சர் ராஜா நிருபர்களிடம் பேசுகைகயில் கூறியதாவது:
முதலீட்டாளர்கள் மாநாட்டில் நடக்கும் சிறப்பு கருத்தரங்குகள் முக்கியமானவை. பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்படும். அதை, தமிழக இளைஞர்கள், இளம்பெண்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாநாட்டில் பங்கேற்க, எதிர்பார்த்ததை விட அதிகமாக, 30,000 க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். இடம் போதாது என்பதால், பதிவை நிறுத்தி விட்டோம்.
கூடுதல் அரங்கை திறந்துள்ளோம். அனைத்து அரங்குகளிலும் நடக்கும் நிகழ்வுகள், நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன. இவற்றை, தமிழகம் முழுவதும், 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நேரடியாக பார்த்துள்ளனர். இதுவரை இல்லாத அளவுக்கு சிறப்பாக மாநாடு நடந்துள்ளது.
ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர், அதாவது ரூ.83 லட்சம் கோடி என்ற பொருளாதார இலக்கை எட்டுவதற்கான செயலாக்க திட்ட அறிக்கையை முதல்வர் வெளியிட்டுள்ளார். தமிழகத்திற்கான அடுத்த கட்ட பாய்ச்சல், எவ்வளவு பிராமண்டமாக உள்ளது என்பது மாநாட்டின் முடிவில் மக்களுக்கு புரியும்.
தமிழகத்தில், நிலம் தேவையான அளவு உள்ளது. சென்னையை சுற்றி வளர்ந்த பொருளாதாரம், இனி தமிழகம் முழுதும் வளர உள்ளது. பரவலாக்கப்பட்ட வளர்ச்சியை நோக்கியே பயணம் உள்ளது. வின்பாஸ்ட் நிறுவனம், துாத்துக்குடியில் ஆலை அமைக்க உள்ளது. தென்தமிழகம், மேற்கு தமிழகம், மத்திய தமிழகம் போன்றவற்றில், மிகப்பெரிய வளர்ச்சி வர உள்ளது.
ஒற்றை சாளர முறையில், தொழில் துவங்க விரைவாக அனுமதி அளிக்கப்படுகிறது. இங்கு முதலீடு செய்தவர்கள், தொடர்ந்து முதலீடு செய்கின்றனர். ஏனெனில், தொழிலுக்கு உகந்த சூழ்நிலையை உருவாக்கி தந்துள்ளோம். தமிழக வரலாற்றில் மிக முக்கியமான சகாப்தமாக இந்த மாநாடு திகழும்.
தமிழகத்தில் புதிய விமான நிலையங்களை உருவாக்க உள்ளோம். தஞ்சாவூர் உட்பட பல நகரங்களில், விமான நிலையங்கள் வர உள்ளன. பல லட்சக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு, தரமான வேலை வாய்ப்பை உருவாக்கி தர உள்ளோம்.
இவ்வாறு அமைச்சர் ராஜா கூறினார்.