மாலத்தீவு அமைச்சர்கள் 3 பேர் இடைநீக்கம்
இந்தியா மற்றும் பிரதமர் மோடியை அவமதிக்கும் வகையில் கருத்துகளை வெளியிட்ட மாலத்தீவு அமைச்சர்கள் 3 பேரை அந்நாட்டு அரசு இடைநீக்கம் செய்தது.
இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத் தீவுக்கு சில தினங்களுக்கு முன்பு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அங்கு எழில்மிக்க கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அத்துடன், ‘ஸ்கூபா டைவிங்’ எனப்படும் கடலுக்கடியில் நீந்தும் சாசகத்தையும் முயற்சி செய்தார்.
இது தொடர்பான புகைப்படங்களை ‘எக்ஸ்’ வலைதளத்தில் பதிவிட்ட பிரதமர், அமைதியும் அழகும் நிறைந்த லட்சத்தீவு மனதை மயக்குவதாக உள்ளது. நீங்கள் சாகசத்தை விரும்புபவராக இருந்தால் உங்களின் பயணப் பட்டியலில் லட்சத்தீவு இடம் பெற வேண்டும் என்று குறிப்பிட்டார்.
மாலத்தீவுக்கு போட்டியாக லட்சத்தீவு சுற்றுலாவை ஊக்குவிக்கும் இந்தியாவின் முயற்சி இது என்ற கருத்து பரலவாக முன் வைக்கப்பட்டது. இதையடுத்து, பிரதமரின் லட்சத்தீவு பயணத்தை முன்வைத்து, மாலத்தீவு அமைச்சர்கள் உள்ளிட்ட அந்நாட்டின் தலைவர்கள் சிலர் சமூக ஊடகத்தில் இந்தியா மற்றும் பிரதமர் மோடியை அவமதிக்கும் வகையிலும், இன வாதத்தை வெளிப்படுத்தும் வகையிலும் கருத்துகளை பதிவிட்டனர்.
சீன ஆதரவு நிலைப்பாடு உடையவராக அறியப்படும் மூயிஸ் கடந்த நவம்பரில் மாலத்தீவு அதிபரான பிறகு இந்தியா – மாலத்தீவு இடையிலான உறவுகளில் சுமுகத்தன்மை இல்லாத நிலை நிலவுகிறது. இச்சூழலில் இந்தியா மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக மாலத்தீவு அமைச்சர்கள் தெரிவித்த கருத்துகளுக்கு அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனத்தைப் பதிவு செய்தனர். மாலேயில் உள்ள இந்தியத் தூதரகமும் அந்நாட்டு அரசிடம் எதிர்ப்பை பதிவு செய்தது.
மாலத்தீவின் விளக்கமும், நடவடிக்கையும்
இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்த மாலத்தீவு அரசு, சம்பந்தப்பட்ட கருத்துகள் தனிப்பட்டவை; அவை அரசின் கருத்துகள் அல்ல. கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் பொறுப்பான வழிமுறையில் பயன்படுத் தப்பட வேண்டும் என்பதில் மாலத்தீவு அரசு நம்பிக்கை கொண்டுள்ளது.
மாலத்தீவு மற்றும் அதன் சர்வதேச கூட்டுறவு நாடுகளுக்கு இடையிலான நெருங்கிய உறவுகளுக்குத் தடை ஏற்படுத்தும் வகையிலோ, வெறுப்புணர்வு மற்றும் எதிர்மறையைப் பரப்பும் வகையிலோ கருத்துச் சுதந்திரத்தைப் பயன்படுத்தக் கூடாது. அது போன்ற அவமதிப்பான கருத்துகளை வெளியிடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது என்று குறிப்பிட்டிருந்தது.
இந்தியா மற்றும் பிரதமர் மோடிக்கு எதிரான கருத்துகளுக்காக, இளைஞர் நலத்துறை இணையமைச்சர்கள் மால்ஷா ஷரீஃப், மரியம் ஷியூனா, அப்துல்லா மஜூம் மஜித் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.