திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் சார்பாக மாநில தகவல் ஆணையர் மா.செல்வராஜ், தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் முன்னிலையில் தகவல் ஆணைய விசாரணை முகாம் நேற்று நடைபெற்றது.
இம்முகாமில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ன் கீழ் தகவல் கோரிய மனுதாரர்கள் அளித்த புகார்கள் மீது இரண்டாம் கட்ட மேல்முறையீட்டு விசாரணை நடைபெற்றது. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கிடைக்க பெறாத மனுதாரர்கள் மேல்முறையீட்டிற்காக நேரடியாக சென்னைக்கு வர சிரமமாக இருக்கும் என்பதை கருதி, தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் சார்பில் தலைமை ஆணையர் மற்றும் ஆணையாளர்கள் நேரடியாக மாவட்டங்களுக்கு சென்று, புகார் குறிப்பிட்ட மனுதாரர்கள் மற்றும் பொது தகவல் அலுவலர்களை சந்தித்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்றையதினம் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் இரண்டாம் கட்ட மேல்முறையீடு செய்த மனுதாரர்களிடமிருந்து வருவாய்த்துறை தொடர்புடைய 1 வழக்கு மற்றும் ஊரக வளர்ச்சி துறை தொடர்புடைய 36 வழக்குகளுக்கு மாநில தகவல் ஆணையர் அவர்களால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டது.