வானிலை ஆய்வு மையம் தகவல்
அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-
தென் கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழுவு பகுதி உருவாகியுள்ளது. இது இன்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக அதே பகுதிகளில் நிலவக்கூடும்.
தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் இன்று (டிச.31) முதல் ஜன.5 வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும்.
டிச.30-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு களின்படி அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம், ஊத்து பகுதியில் 22 செ.மீ., நாலுமுக்கு பகுதியில் 21 செ.மீ., காக்காச்சியில் 20 செ.மீ., மாஞ்சோலையில் (திருநெல்வேலி), 10 செ.மீ., பாபநாசத்தில் 3 செ.மீ., மதுரை புலிப்பட்டி, பெரியபட்டி, நீலகிரி மாவட்டம், ஆதார் எஸ்டேட், குன்னூர் ஆகிய இடங்களில் 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
அரபிக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக குமரிக் கடல் மற்றும் அதையொட்டிய மன்னார் வளைகுடா பகுதிகள், தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள், அதையொட்டிய மாலத்தீவு பகுதிகளில் இன்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.
இப்பகுதி மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.