தமிழக ஆளுநர் ரவி சுயநினைவோடு உள்ளாரா? மனநலம் பாதித்தவர் போல பேசி வருகின்றார், என்று புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கடுமையான விமர்சனம் செய்து பேசி உள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி அவருடைய இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது
ராகுல் காந்தியின் பாதயாத்திரைக்கு அசாம் மாநிலத்தில் இடையூறு விளைவித்தார்கள். பாதயாத்திரைக்கு கிடைக்கும் வரவேற்பை சகிக்க முடியாமல் அம்மாநில முதலமைச்சர் துண்டுதலின்பேரில். இடையூறு ஏற்படுத்தப்பட்டது. திட்டமிட்டு, யாத்திரையை தடுக்க முயன்றனர். இதற்கு பா.ஜனதாவுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம்.
தமிழக கவர்னர் ரவி ஏற்கனவே அரசை விமர்சிப்பதும், அரசு பணிகளில் தலையிடுவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார். இதுதொடர்பாக தி.மு.க. எம்எல்ஏ-க்கள் பிரதமர், மத்திய உள்துறை மந்திரியிடம் புகார் செய்தும் எந்த மாற்றமும் இல்லை. சமீபத்தில் ஒரு புதிய சர்ச்சையை கவர்னர் ரவி ஏற்படுத்தியுள்ளார்.
சுபாஷ்சந்திரபோஸ் ராணுவ கிளர்ச்சிதான் இந்தியா சுதந்திரமடைய காரணம் என சரித்திரத்தை மாற்றி, திரித்து, தவறான தகவலை தெரிவித்துள்ளார். கவர்னர் ரவி சுயநினைவோடு உள்ளாரா? உலகமே இந்தியாவுக்கு சுதந்திரத்தை பெற்றுத்தந்தது காந்திதான் என்றும் அவரின் அகிம்சை போராட்டத்தையும் பாராட்டுகின்றனர். ஆனால் கவர்னர் ரவி, மனநலம் பாதித்தவர்போல பேசியுள்ளார். சுதந்திர போராட்டத்தையும், காந்தியையும் கொச்சைப்படுத்திய ஆளுநர் ரவிக்கு கண்டனம் தெரிவிக்கிறேன்.இவ்வாறு என கூறினார்.
புதுச்சேரியில் மத்திய அரசின் திட்டங்கள் உண்மையில் செயல் படுகிறதா? பிரதமர் காப்பீடு திட்ட அட்டையை வைத்து சென்னை அப்பல்லோவில் சிகிச்சை பெற முடியுமா? ஜிப்மரில்கூட சிகிச்சை பெற முடியவில்லை. பிரதர் வீடு கட்டும் திட்டத்தில் 300 வீடு கூட கட்டப்படவில்லை. மக்களை ஏமாற்றும் விதத்தில் மத்திய அரசு திட்டங்கள் புதுச்சேரியில் செயல்படுத்தப்படுவதாக வீண் விளம்பரம் செய்கின்றனர்.
10 ஆயிரம் பேருக்கு வேலை தருவோம் என்றனர். இதுவரை 700 பேருக்குக்கூட வேலை தரவில்லை. சட்ட சபையில் அறிவித்த எந்த அறிவிப்பும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. லேப்டாப் வழங்கியதில் ரூ.21 கோடிக்கு ஊழல் நடந்துள்ளது. இதற்கான கோப்பை தலைமை செயலாளர் திருப்பி அனுப்பியும், கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் கவர்னருக்கும் இதில் பங்கு உண்டு. எதையும் செய்யாமல் பாராளுமன்ற தேர்தலுக்காக அரசு பணத்தை வீணாக்குகின்றனர். புதுவையில் கஞ்சா, கொலை, போதைப்பொருட்கள் விற்பனை நாள்தோறும் அதிகரிக்கிறது. இதுதான் பெஸ்ட் புதுவையா? இவ்வாறு அவர் கூறினார்.
நாராயணசாமியிடம் தமிழக அமைச்சர் ராஜகண்ணப்பன், காங்கிரசை விமர்சித்து பேசியுள்ளாரே? என கேள்வி எழுப்பியதற்கு, அரசியல் கட்சிகள் தங்கள் கட்சியை வளர்க்க பலமாக இருப்பதாக சொல்வார்கள். புதுவையை பொறுத்தவரை காங்கிரஸ்தான் நம்பர் ஒன் கட்சி. எந்த கட்சி பலமான கட்சி என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
எம்எல்ஏக்கள் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து கட்சியின் பலத்தை தீர்மானிக்க முடியாது.1980ல் 2 தொகுதியில் வெற்றி பெற்ற பாஜகதான் இப்போது ஆட்சி செய்கிறது. எனவே வெற்றி, தோல்வி மாறி, மாறி வரும். அனுபவம் உள்ள தமிழக அமைச்சர் பேசியதை விமர்சிக்க விரும்பவில்லை. காங்கிரஸ், திமுக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை.
எங்கள் கட்சி தலைமையிடம் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட வலியுறுத்தி வருகிறோம். கட்சி தலைமை என்ன சொல்கிறதோ? அதை நாங்கள் செய்கிறோம். அதேபோல திமுக தலைமை சொல்வதை திமுகவினர் செய்கின்றனர். ஏற்கனவே நாங்கள் சிட்டிங் எம்பியாக உள்ளோம். எங்கள் கூட்டணியில் விரிசல், குடைச்சல் ஏதும் இல்லை.இவ்வாறு புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறினார்.