திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நல்லவன்பாளையம் ஊராட்சி பகுதியிலுள்ள சமுத்திரம் கிராமத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ.56.47 கோடி மதிப்பீட்டில் அரசு மாதிரி பள்ளி மற்றும் மாணவ, மாணவியர் தங்கும் விடுதி கட்டடங்கள் பணிகளுக்கான கால்கோள் விழா நேற்று நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தலைமை தாங்கினார். சி.என்.அண்ணாதுரை எம்பி, மு.பெ.கிரி எம்எல்ஏ, பொதுப்பணித்துறை (கட்டுமானம்) சென்னை மண்டல தலைமை பொறியாளர் ஆயிரத்து அரசு ராஜசேகரன், சிறப்பு தலைமை பொறியாளர் வெங்கடாஜலம், செயற்பொறியாளர் கௌதமன் ஆகியோர் முன்னிலை வகிக்க பள்ளி தலைமை ஆசிரியர் இல.இராமதாஸ் அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு பொதுப்பணி மற்று நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு அரசு மாதிரி பள்ளி மற்றும் மாணவ, மாணவிகள் தங்கும் விடுதி கட்டடங்கள் பணிகளுக்கான கால்கோள் விழாவில் மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்து பேசினார்.
அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:
திருவண்ணாமலை சண்முகா அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக அரசு மாதிரி பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் இஎம்ஐஎஸ் வரைதளம் (இனசுழற்சி)யின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு 411 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
சமுத்திரம் ஊராட்சியில் ரூ.56.47 கோடி மதிப்பில் அரசு மாதிரி பள்ளி மற்றும் மாணவ, மாணவியர்களுக்கான உண்டு உறைவிட பள்ளி கட்டி முடிக்கப்பட்டு இதில் மாவட்ட அளவில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை 400 மகளிர், 400 ஆண்கள் என மொத்தம் 800 மாணவ, மாணவியர்கள் (இனசுழற்சி)யின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு கல்வி பயில உள்ளனர். மேலும் புதியதாக கட்டப்படவுள்ள மாதிரி பள்ளியில் 22 வகுப்பறைகள் 3 ஆய்வகங்கள் நூலகம் கணினி அறை அலுவலகம் கூட்டரங்கம் மற்றும் கழிப்பறைகள் கட்டப்படவுள்ளது.
ஆண்கள் விடுதியில் 63 தங்கும் அறைகள் வரவேற்பு அறை, விடுதி காப்பாளர் அறை, பொது அறை, நூலகம் மின் அறை, மின்தூக்கி, 2 எண்கள் சமையல் அறை, சலவை அறை, சமயற்கூடம், சேமிப்பு அறை, குளியல் அறை, மற்றும் கழிப்பறைகள் இதேபோல பெண்கள் விடுதியும் கட்டப்படவுள்ளது என்றார்.
விழாவில் மாநில தடகள சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், நெடுஞ்சாலைதுறை வட்ட கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல், கோட்ட பொறியாளர் ராஜ்குமார், நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், மாவட்ட துணை செயலாளர் பிரியாவிஜயரங்கன், மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், தாசில்தார் மு.தியாகராஜன், திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) எஸ்.அருணாச்சலம், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் ஆர்.கோபாலகிருஷ்ணன், முகிலன், அருள்ஜோதி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் இல.சரவணன், ஒன்றியக்குழு உறுப்பினர் மண்டி ஏழுமலை, ஊராட்சி மன்ற தலைவர் ரவிகுமார், கிராம நிர்வாக அலுவலர் மு.இளையராஜா, ஊராட்சி செயலாளர் இரா.முருகன் உள்பட அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.