விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி தலைமையில் நடைபெற்றது
அப்போது அவர் பேசியதாவது :
தமிழ்நாடு முதலமைச்சர் மாற்றுத்திறனாளிகளுக்காக பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். மேலும் மாவட்டந்தோறும் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தி மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்து அவர்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை வழங்கிட உத்தரவிட்டுள்ளார்கள்.
அதனடிப்படையில் இன்றைய தினம் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் குறைகள் கேட்டறியப்பட்டு 498 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
அந்த வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, தேசிய அடையாள அட்டை மாதாந்திர ஓய்வூதியம் முதுகுத்தண்டுவடம், தசைச்சிதைவு மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மாதாந்திர உதவித்தொகை இணைப்புச் சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர், பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி கை மிதிவண்டி செயற்கை கை மற்றும் கால் உபகரணங்கள் நவீன காதொலிக்கருவி ஊன்றுகோல் பார்வையற்றவர்களுக்கான கைப்பேசி தொழில் தொடங்கிட மானியத்துடன் கடனுதவி இலவச வீட்டுமனைப்பட்டா, தொகுப்பு வீடுகள் மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண உதவித்தொகை பள்ளி மற்றும் கல்லூரி கல்வி உதவித்தொகை, சட்டப்படிப்பு உதவித்தொகை பார்வைற்ற மாற்றுத்திறனாகள் பயில்வதற்கான நவீன பிரெய்லி சாதனம் பார்வையற்ற மாற்றத்திறனாளிகளுக்கான பேருந்து பயண சலுகை அட்டை உள்ளிட்டவை வேண்டி பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
இக்கோரிக்கை மனுக்கள் அனைத்தும் சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கப்பட்டு உடனடி தீர்வின் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கிட உத்தரவிடப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ருதஞ்ஜெய்
நாராயணன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) காஞ்சனா, தனித்துணை ஆட்சியர் (சபாதி) முகுந்தன், உதவி ஆணையர் (கலால்) முருகேசன், விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் காஜா சாகுல் ஹமீது, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.