விருத்தாசலம் பகுதிகளில் நடைபெற்று வரும் நான்கு வழிச்சாலைப் பணிகளை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகம் முழுவதும் முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், இரு வழி சாலைகள் நான்கு வழி சாலைகளாக அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மாநில நெடுஞ்சாலைகளான விருத்தாசலம் – மதனத்தூர் வரை உள்ள ஜெயங்கொண்டம் சாலை மற்றும் விருத்தாசலம் புறவழிசாலையை நான்கு வழி சாலையாக அகலப்படுத்திட ரூ.163.00 கோடி மதிப்பீட்டில் இரு வழித்தட சாலைகளை நான்கு வழித்தடசாலையாக அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றது.
இப்பணிகளின் ஒரு பகுதியாக வெள்ளாறு மற்றும் மணிமுக்தாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது.
இந்நிலையில் விழுப்புரம் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் செந்தில்குமார் நேற்று இந்தப் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது பணிகளின் முன்னேற்றம், தரம் மற்றும் விரைந்து முடிப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது கோட்டப்பொறியாளர் அய்யாதுரை, உதவிக்கோட்டப்பொறியாளர் அறிவுக்களஞ்சியம், உதவி பொறியாளர் தனபாலன் ஆகியோர் உடன் இருந்தனர்.