திருவண்ணாமலை மகா தீப மலை மீது தடையை மீறி ஏறிய வெளிநாட்டினர் உள்பட 7 பேரிடம் வனத்துறையினர் விசாரணை செய்தனர். தடையை மீறி எறுபவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பின்புறம் மகாதீபம் ஏற்றப்படும் 2,668 அடி உயர மலை வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த மலைமீது பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஏறுவதற்கு வனத்துறையினரால் தடை விதிக்கப்பட்டு உள்ளது. கார்த்திகை மாதம் மகாதீபம் ஏற்றப்படும் நாட்களில் மட்டும் பக்தர்கள் மலை ஏறி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
கடந்த நவம்பர் மாதம் மகா தீபம் ஏற்றபட்டது. அந்த சமயத்தில் ஏராளமான பக்தர்கள் மலை ஏறி தரிசனம் செய்து வந்தனர். அதனை தொடர்ந்து, கடந்த சில நாட்களாக தடையை மீறி சிலர் மலை ஏறி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு விஷமிகள் சிலர், மலையில் உள்ள செடிகளுக்கு தீ வைத்தனர். அதனை தொடர்ந்து தடையை மீறி மலை ஏறி செல்லும் நபர்களை தடுக்க வனத்துறையினர் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கைது நடவடிக்கை
இந்த நிலையில் தடையை மீறி மலை மீது ஏறிய வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் மற்றும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 6 பேரை வனத்துறையினர் பிடித்து திருவண்ணாமலை வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் வனச்சரக அலுவலர் சரவணன் தலைமையிலான அலுவலர்கள் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களை எச்சரித்து விடுவித்தனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில்
மகா தீபம் ஏற்றப்படும் மலையில் தடையை மீறி ஏறினால் கடுமையான அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து இந்த செயலில் ஈடுபடும் நபர்கள் கண்டறியப்பட்டால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர்.