பெண்கல்வியை ஊக்குவிப்பது திராவிட மாடல் அரசு என அமைச்சர் எ.வ.வேலு பெருமையுடன் கூறியுள்ளார்.
செய்யாறு அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய கலையரங்க கட்டிட திறப்பு விழா நடைபெற்றது.
விழாவில் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன், ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தரணிவேந்தன், செய்யார் சட்டமன்ற உறுப்பினர் ஓ.ஜோதி, வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அம்பேத்குமார், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் புதிய கலையரங்க கட்டிடத்தை திறந்து வைத்து, அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்களையும், பள்ளி சீருடைகளையும், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினிகளையும் வழங்கிய பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது :
தாமின் புறுவ துலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார் என்று வள்ளுவ பெருந்தகை குறிப்பிடுகிறார். அதாவது தனக்கு இன்பம் தருகிற கல்வியறிவு உலகத்தாருக்கும் இன்பம் தருவதை கண்டு அறிஞர்கள் மேலும் மேலும் கற்றிட விரும்புவார்கள்.
அதே போன்று முதலமைச்சர் கல்வித்துறையை கணினிமயமாக்குவதன் மூலம் மாணவச் செல்வங்களுக்கு எளிய முறையில் கல்வி கற்பிக்க முடியும் என்பதற்காக கையடக்க மடிக்கணினியினை ஆசிரியர்களுக்கு வழங்க அறிவுறுத்தியுள்ளார்கள். அதன்படி திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில் உள்ள 563 தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், 1202 இடைநிலை ஆசிரியர்களுக்கும், செய்யாறு கல்வி மாவட்டத்தில் 536 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும், 865 இடைநிலை ஆசிரியர்களுக்கும் என மொத்தம் 3178 ஆசிரிய பெருமக்களுக்கு கையடக்க மடிக்கணினி வழங்கப்படுகிறது.
நமது திருவண்ணாமலை மாவட்டத்தை முன்னிலை மாவட்டமாக உருவாக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட என்னை உட்பட நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகமும் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறோம்.
ஆனால் நம்முடைய மாவட்டம் கல்வித்துறையில் பின்தங்கியுள்ளதை நினைத்து மிகவும் வருந்துகிறேன். ஆகவே அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் தங்களை தனியார் பள்ளி தாளாளர் போல எண்ணி தங்கள் பள்ளியை வழி நடத்த வேண்டும். அதைப்போன்று அனைத்து ஆசிரிய பெருமக்களும் தங்களுடைய மாணவர்களின் மீது அதிக கவனம் செலுத்தி குறிப்பாக கல்வியில் பின்தங்கிய மாணவ, மாணவியர்கள் மீது அக்கறை கொண்டு சிறப்பு வகுப்புகளை நடத்தி அவர்களை தேர்ச்சி பெற செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று நமது மாவட்டம் கல்வியில் சிறந்த நிலையை அடையும் எனக்கேட்டுக்கொள்கிறேன்.
பெண்கல்வியை ஊக்குவிப்பது திராவிட மாடல் அரசு. பெண்களை பெற்றெடுத்தால் பெற்றோர்கள் பெருமை கொள்ளவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதனையடுத்து செய்யார் கல்வி மாவட்டத்தில் நடந்து முடிந்த 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுத்தொகையினை (முதல் பரிசு ரூ. 1,05,000, இரண்டாம் பரிசு ரூ.1,00,000, மூன்றாம் பரிசு ரூ. 50,000) மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு. மு.பிரியதர்ஷினி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி, செய்யார் சார் ஆட்சியர் பல்லவி வர்மா, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனிவாசன், மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) சரண்யா, செய்யார் ஒன்றியக்குழு தலைவர் பாபு, வெம்பாக்கம் ஒன்றியக்குழு தலைவர் மாமண்டூர் டி.ராஜி, செய்யாறு மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்ககல்வி) ஜெயகாந்தம், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.