குழந்தைகள் வெளியில் நின்றதால் பரபரப்பு
ஆம்பூர் அருகே அங்கன்வாடி பள்ளிக்கு தி.மு.க. பிரமுகர் பூட்டு போட்டதால், குழந்தைகள் 1 மணி நேரத்துக்கும் வெளியில் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நாச்சார்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட கம்மியம்பட்டு புதூர் பகுதியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக அங்கன்வாடி பள்ளி செயல்பட்டு வருகிறது. அதில் அந்தப் பகுதியில் உள்ள 22 குழந்தைகள் பயின்று வருகின்றனர்.
இன்று பள்ளிக்கு கூடுதலாக படிக்கட்டு உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகள் செய்வதற்காக ஊராட்சி சார்பில் பணிகள் நடைபெற இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த திமுக கிளைச் செயலாளர் பூபதி என்பவர், இந்த இடம் தனது அத்தை பெயரில் உள்ளதாகவும் இது தங்களுக்கு சொந்தமான இடம் எனக்கூறி அங்கன்வாடி பள்ளி குழந்தைகளை வெளியேற்றி விட்டு அங்கன்வாடி பள்ளிக்கு பூட்டு போட்டார். இதனால் பள்ளி குழந்தைகள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வெளியில் (வெயிலில்) நிற்கக்கூடிய அவல நிலை ஏற்பட்டது.
தகவல் அறிந்த ஊராட்சி நிர்வாகத்தினர் மற்றும் பெற்றோர்கள் விரைந்து சென்று திமுக பிரமுகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஆம்பூர் கிராமிய போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு பூட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்து குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து திமுக பிரமுகர் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினரிடம் விசாரணை மேற்கொண்டபோது, கடந்த 1980 ல் அந்த இடத்தை அரசுக்கு எழுதிக் கொடுத்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
30 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கன்வாடி பள்ளி கட்டிடம் தங்களுக்கு சொந்தமானது எனக் கூறி பள்ளி குழந்தைகளை வெளியேற்றிய திமுக பிரமுகர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.