திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பெருவளாகத்தில் புதிய அலுவலக கட்டிடம் வழங்க உறுதுணையாக இருந்த அமைச்சர் எ.வ.வேலுக்கு மாவட்ட ஊராட்சிக்குழு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பெருவளாகத்தில் உள்ள மாவட்ட அலுவலக புதிய கட்டிடத்தில் மாவட்ட ஊராட்சிக்குழுவின் சாதாரண குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சீ.பார்வதிசீனுவாசன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பா.பாரதிராமஜெயம் முன்னிலை வகிக்க, மாவட்ட ஊராட்சி செயலர் ஜி.ரவிசந்திரன் அனைவரையும் வரவேற்றார்.
இந்த கூட்டத்தில் கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கடந்த 1996ம் ஆண்டிலிருந்து வாடகை கட்டிடத்தில் இயங்கிவந்த மாவட்ட ஊராட்சி அலுவலகத்தை மாற்றி புதிய கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருவளாகத்தில் அமைவதற்கு உறுதுணையாக இருந்த அமைச்சர் எ.வ.வேலு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கரபாண்டியன் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்ததோடு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்ப்புதல்வன் திட்டம் தமிழக அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கவும் படிப்பு தொடர்பான அனைத்து வகையான பொருட்களையும் வாங்கி தங்கள் படிப்பை முடிக்கவும் வழிவகை செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தும், மாவட்ட ஊராட்சி நிதியில் எஸ்எப்சி பணிகளுக்கு கடந்த ஜூன் மாதம் ரூ.1.26 கோடியும் ஜூலை மாதம் ரூ.1.19 கோடியும் செலவினம் மன்றத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு, மாவட்ட ஊராட்சிக்கான மாநில நிதிக்குழு மானியம் (எஸ்எப்சி) 2024-25ம் ஆண்டுக்கு 2வது கட்டமாக பணிபட்டியல் தேர்வு செய்ய மன்றத்தின் ஒப்புதல் வழங்குவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் ஒருமனதான நிறைவேற்றப்பட்டது.இந்த கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் இல.சரவணன், ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம், ஞானசௌந்தரி மாரிமுத்து, கே.சாந்தி கண்ணன், எஸ்.முத்து, என்.சுஜாதா டி.பூங்கொடி, அ.கோவிந்தராசன், கே.ஆர்.தவமணி, கே.அரவிந்தன், கஸ்தூரி, ஆர்.சகாதேவன் பி.முத்துமாறன் மற்றும் மாவட்ட ஊராட்சிக்குழு அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) ஏ.மிருணாளினி நன்றி கூறினார்.