கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள திம்மாபுரம் காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவருக்கும் பாண்டியன் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த நிர்மலா என்பவருக்கும் கடந்த 8 வருடத்திற்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.
செந்தில் நெல் அறுக்கும் அறுவடை இயந்திரத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, ஆந்திராவில் மின்சாரம் தாக்கி செந்தில் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் நிர்மலா தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று நாககுப்பம் பகுதியில் உள்ள பால் சேகரிக்கும் நிலையத்தில் பால் ஊற்றிவிட்டு வீடு திரும்பவில்லை.
இது தொடர்பாக அவரது தம்பி மணிவண்ணன், நிர்மலாவை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்துள்ளார். தொடர்ந்து இரவு முழுவதும் தேடியும் அவர் கிடைக்காத நிலையில், காலையில் வீட்டின் அருகே உள்ள சோளக்காட்டில் நிர்மலா உயிரிழந்து கிடப்பதை பார்த்து அவரது தம்பி கதறி அழுதார்.
இதுகுறித்து காவல்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் கள்ளக்குறிச்சி எஸ்.பி மற்றும் சின்னசேலம் காவல் ஆய்வாளர் ஏழுமலை ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.