திருவண்ணாமலையில் பள்ளி மாணவிகளிடம் ஆசிரியர்கள் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலையில் பிரபலமான தனியார் பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் இருந்து மாவட்ட சிறார் பாதுகாப்பு அமைப்புக்கு ஒரு புகார் வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த புகாரின் அடிப்படையில் பெண் அலுவலர்கள் சென்று மாணவிகளிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த விசாரணையில் ஆசிரியர்கள் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக பல மாணவிகள் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாகக் குழந்தைகள் நல அமைப்பின் சார்பில் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அளிக்கப்பட்ட புகாருக்கு தற்போது வரை அதன் மீது எந்த வழக்கும் பதிவு செய்யாமல் மகளிர் காவல்நிலைய போலீசார் கிடப்பில் வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
பாலியல் குற்றத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் பெயரைக் குறிப்பிட்டுத் தான் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தனிப்பிரிவு போலீசார் மற்றும் காவல்நிலையத்தை தொடர்பு கொண்டபோது விசாரணை நடந்தது உண்மை தான் ஆனால் வழக்கு பதிவு செய்யப்படவில்லை என சுறுக்கமாக முடித்துக்கொண்டனர். இதனால் வழக்கு பதிவு தொடர்பான உண்மை தகவல் கிடைக்கவில்லை.
அதேநேரத்தில் இந்த விவகாரத்தை போலீஸார் மூடி மறைக்க முயலுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் லட்சக் கணக்கில் பண பேரம் பேசப்படுவதாகவும் கூறப்படுகிறது.