மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மக்கள் குறைதீர்க்கும் நாள் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று மனுதாரர்கள் முன்னிலையில் விசாரணை மேற்கொண்டு தொடர்புடைய அலுவலர்கள் உடனடியாக கவனம் செலுத்தி குறித்த காலத்திற்குள் தீர்வு வழங்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பழனி அலுவலர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்தார். கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து சுமார் 444 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. அதில் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, வீட்டுமனை பட்டா கோருதல், ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், கலைஞரின் கனவு இல்லம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் நேரடியாக பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
முதலமைச்சர் அவர்களின் தனிப்பிரிவு மனுக்கள் முதல்வரின் முகவரி மனுக்கள் மற்றும் அமைச்சர் பெருமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது உடனடி தீர்வு காண வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.