வேலூர் தோட்டப்பாளையத்தில் உள்ள கருமாரியம்மன் கோயிலில் உண்டியலை உடைத்து பணம் திருடியவருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.வேலூர் மாவட்டம், தோட்டப்பாளையம் டி.வி.கே நகர் 2-வது மேட்டுத்தெருவில் கருமாரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் தற்போது புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நள்ளிரவில் இளைஞர் ஒருவர் கோயிலுக்குள் புகுந்து அங்கிருந்த இரும்பு கடபாறையால் உண்டியலை உடைத்துள்ளார். பின்னர் அந்த உண்டியலில் இருந்த சில்லறை காசுகளை கீழே போட்டுவிட்டு ரூபாய் நோட்டுகளை மட்டும் எடுத்து தனது பேன்ட் பாக்கெட்டில் போட்டுள்ளார்.இதனைத்தொடர்ந்து மற்றொரு உண்டியலை உடைக்க முற்பட்டபோது சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் வெளியே வந்து பார்த்துள்ளனர். அப்போது அந்த போதை ஆசாமி திடீரென தப்பி ஓட முயற்சித்துள்ளார். அதற்குள் அங்கிருந்த பொதுமக்கள் அவரை மடக்கிபிடித்து தர்மடி கொடுத்தனர்.
பின்னர் போதை ஆசாமியின் கைகளைக் கட்டிவிட்டு, வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உண்டியல் உடைக்கப்பட்ட பகுதியை ஆய்வு செய்து பொதுமக்களிடமிருந்து திருடனை போலீசார் மீட்டனர்.இதையடுத்து போதை ஆசாமியை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.