வேலூரில் லோடு வேன் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வேலூர் சேண்பாக்கம் சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில், சிமெண்ட் மூட்டை மற்றும் கம்பி ஏற்றிக்கொண்டு கொணவட்டம் நோக்கிச் சென்ற லோடு வேன் திடீரென நிலைதடுமாறி சென்டர் மீடியேட்டரில் மோதி வேன் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் லோடு வேனில் ஏற்றிவந்த சிமெண்ட் மூட்டைகள், கம்பிகள் சாலை முழுவதும் சிதறி போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த வேலூர் வடக்கு போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த விபத்தில் வேன் ஓட்டுநர் மற்றும் கிளீனர் சிறிய காயங்களோடு உயிர் தப்பினர். இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் இந்த விபத்தினால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.