கலசப்பாக்கம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் கூலித்தொழிலாளிகள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே புதுப்பாளையம் அடுத்த நாகப்பாடியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி அருகே செங்கம்-போளூர் மாநில நெடுஞ்சாலையில் உண்ணாமலைபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சக்ரவர்த்தி மகன் ரஜினி (47) மற்றும் ராமசாமி மகன் வெங்கடேசன் (37) ஆகிய இருவரும் ரஜினி என்பவருக்குச் சொந்தமான இருசக்கர வாகனத்தில் சொந்த வேலையாக அருகில் உள்ள காஞ்சி கிராமம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது கோயம்புத்தூரில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற சரக்கு லாரி இருசக்கர வாகனத்தின் பின்பக்கம் மோதிய விபத்தில், அதில் சென்ற இருவரும் சாலையில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் லாரி சக்கரம் இருவர் தலைமீதும் ஏறி சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த புதுப்பாளையம் காவல்துறையினர் சாலையில் இரத்த வெள்ளத்தில் கிடந்த இரு கூலித்தொழிலாளிகளின் சடலங்களைக் கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பின்னர் செங்கம் துணை காவல் கண்காணிப்பாளர் ராஜன் சம்பவ இடத்திற்குச் சென்று விபத்து ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டார்.