திருவண்ணாமலை வேங்கிக்கால் குமரன் மஹாலில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்து ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கத்தை ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பேசியதாவது:
ஒரு சமூகத்தில் சமமான சமூக நீதியுடன் வாழ்வதற்கான வழிவகையை சட்டத்தின் பாதுகாப்பில் எவ்வாறு அடைவது என்பது குறித்து இக்கருத்தரங்கின் நோக்கமாகும். அனைத்து மனிதர்களும் பிறப்பால் சமமானவர்கள். பிறப்பால் எந்த வேறுபாடுகளும் இல்லை. சமூகத்தில் சிலர் செய்கின்ற தவறுகளின் மூலமாக அந்த சமூகநீதி கிடைக்கப்பெறாமல் இருக்கிறது. மேலும் அவ்வாறு செய்பவர்களுக்கு சட்டரீதியாக தண்டனை வழங்கி சமூகத்தில் சமூக நீதியை நிலைநாட்டுவது தான் இந்த வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் உடைய அடிப்படை நோக்கம்.
தற்போதைய சூழ்நிலையில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி நகரங்களை பொறுத்தவரையில் எந்தவிதமான பாகுபாடும் பார்ப்பதில்லை. குறிப்பாக சென்னையை பொறுத்த வரையில் கிட்டத்தட்ட 10 மில்லியன் மக்களுக்கு மேல் வசித்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் அவர்கள் அனைவருக்கும் இடையே எந்த விதமான ஏற்றத்தாழ்வுகளையும் பார்ப்பதில்லை. அவரவர்கள் பணி நிமித்தமாக பல்வேறு சூழ்நிலை காரணமாக அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றார்கள். ஒவ்வொரு குடியிருப்புகளை பொறுத்தவரையில் அந்த குடியிருப்பில் அனைத்து தரப்பு மக்களும் வாழுகிறார்கள். மேலும், யார் என்று கூட அவர்களுக்கு தெரிவதில்லை, ஒரு மனிதர்களாக அவர்கள் இணைந்து வாழ்கிறார்கள்.
ஆனால், கிராமங்களை நோக்கி செல்லுகின்ற போதுதான் இந்த பிரச்சனைகள் அதிகமாக ஏற்படுகின்றன. மனிதர்கள் அனைவரும் சமமானவர்கள் என்ற கோட்பாட்டில் இருந்து மாறி அந்த வன்கொடுமை செய்யப்படுகின்ற பொழுது அதை நாம் எவ்வாறு பரிகாரம் தேடிச் செல்வது என்பதுதான் அதனுடைய அடிப்படை நோக்கமாகும். ஆகவே இன்றைய விழிப்புணர்வு கருத்தரங்கம் என்பது இவர்கள் சமமாக வாழ்வதற்கான ஒரு வழிவகையை ஏற்படுத்திக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும், இக்கருத்தரங்கில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் சட்டப் பாதுகாப்பு, நிவாரணம் குறித்து விரிவாக ஊராட்சிமன்ற தலைவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு, இது குறித்து கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ராம்பிரதீபன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.