திண்டிவனத்தில் மகளிருக்கான அரசு நகர பேருந்தில் பெண் பயணிகளை அலைகழிக்க வைக்கும் ஓட்டுநர்களின் செயல்பாடுகள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்திலிருந்து பொம்பூர் கிராமத்திற்கு தடம் எண் 4D அரசு நகரப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்தப் பேருந்தில் மகளிர் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை திண்டிவனத்திலிருந்து புறப்படத் தயாராக இருந்த பேருந்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட பயணிகள் அமர்ந்திருந்தனர். அப்போது திடீரென மடுகரைப் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் சிவபெருமாள், பேருந்து பழுதாகி உள்ளதால் பணிமனைக்கு செல்ல வேண்டும் என அனைவரையும் கீழே இறங்குமாறு கூறியுள்ளார். மேலும் நடத்தினரையும் அவர் கடிந்து கொண்டுள்ளார். பேருந்தில் இருந்த பயணிகள் இறங்கி அருகில் இருந்த தனியார் பேருந்தில் ஏறியவுடன், சிறிது நேரம் கழித்து தனியார் பேருந்து புறப்பட்ட பின் அதன் பின்னால் காலியாக அரசு நகரப் பேருந்தை ஒட்டிச் சென்றுள்ளனர். தனியார் பேருந்து நடத்துனர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு அரசு பேருந்து வரும் பயணிகளை இவ்வாறாக தனியார் பேருந்து இருக்கு மாற்றிவிடும் சம்பவம் தொடர்கதையாக நடந்து வருகிறது.
அதேபோல் மகளிர் செல்லும் இலவசப் பேருந்துகள் இயக்கும் ஓட்டுநர்கள், பெண்கள் பேருந்தை நிறுத்த கை காட்டும் பொழுது நிறுத்துவது போல் அருகில் வந்து பின்னர் வேகமாக பேருந்தை இயக்கி வருவருகின்றனர். இதேபோல் பல ஓட்டுநர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதுபோன்று பள்ளி நேரங்களில் மாணவ, மாணவிகளை ஓட விட்டு பேருந்தில் ஏற்றுவது என்பது தொடர்கதையாக நடந்து வருகிறது. அவ்வாறு ஓடும் பொழுது மாணவ, மாணவிகள் பேருந்து சக்கரத்தில் சிக்கும் அபாய நிலை இருந்து வருகிறது. தமிழக அரசு மகளிர் பயணம் செய்ய பேருந்துகளை இயக்கி வருகிறது என ஆளுங்கட்சியினர் பல மேடைகளில் கூறி வந்தாலும், பேருந்து ஓட்டுநர்கள் ஊதியம் வாங்காதது போல் அவர்களை ஏற்றி இறக்குவதில் சிரமப்படுகின்றனர். இவ்வாறான ஓட்டுநர்கள் மீது மாவட்ட ஆட்சியர் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.