காட்பாடியில் பேருந்துகளை நிறுத்தி போக்குவரத்து அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டம், காட்பாடி வள்ளிமலை பேருந்து நிறுத்தத்தில் இருந்து பாகாயம் வரை செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் காட்பாடி அடுத்த ஓடை பிள்ளையார் கோயில் எதிரில் உள்ள ஆக்சிலியம் காலேஜ் ரவுண்டானா மற்றும் டான் போஸ்கோ பள்ளி ஆகியவற்றின் வழியே சென்று சில்க் மில் அருகே நெடுஞ்சாலையை அடைய வேண்டியது வழக்கம். ஆனால் கடந்த மூன்று மாத காலமாக சாலை சீரமைப்பு மற்றும் சிறு பாலம் ஆகிய பணிகள் நடைபெற்று வந்ததால், இந்த பாதை பயன்பாடு நிறுத்தப்பட்டது. இதனால் இவ்வழியே செல்ல வேண்டிய பேருந்துகள் சித்தூர் – கடலூர் நெடுஞ்சாலை வழியாக சென்று வந்தன.
தற்போது பாலம் மற்றும் சாலைப் பணிகள் முடிந்து போக்குவரத்திற்கு ஏற்ற நிலையில் இருப்பதால் இந்த வழியாக செல்ல வேண்டிய பேருந்துகள் செல்லாமல் இருந்து வந்தன. இது குறித்து பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியருக்கு தகவல் அளித்து வந்தனர். அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பெயரில் மாவட்ட போக்குவரத்து அதிகாரி சம்பத்குமார் மற்றும் ஆய்வாளர் மாணிக்கம் ஆகியோர் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது சீருடை அணியாத பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநருக்கு அபராதம் விதித்தனர். மேலும் சீருடை அணியாமல் இனிமேல் வந்தால் உங்களுடைய லைசென்ஸ் ரத்து செய்யப்படும் எனக் கூறி அவர்களுடைய பேருந்து உரிமையாளருக்கும் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் இனிமேலாவது இவ்வழியாக பேருந்துகள் செல்ல வேண்டும் என்பது அப்பகுதி பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் மக்களின் கோரிக்கையாக உள்ளது.