திருக்கோவிலூரில் போலி வழக்கறிஞராக செயல்பட்ட நபருக்கு 6 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.40,000 அபராதமும் விதித்து குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே ஜி.அரியூர் கிராமத்தைச் சேர்ந்த அரசன் மகன் வீரன் (39) என்பவர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் உறுப்பினராக பதிவு செய்யாமலேயே, போலியான பதிவு மூலம் திருக்கோவிலூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தொழில் செய்து வந்துள்ளார்.
இதுகுறித்து திருக்கோவிலூர் வழக்கறிஞர் சங்க செயலாளர் சரவணகுமார், கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பரில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தினர்.
இந்த வழக்கின் விசாரணையில், போலிச் சான்றிதழ் மூலம் வழக்கறிஞர் பணி செய்து ஏமாற்றியது நிரூபிக்கப்பட்டதால், வீரனுக்கு 6 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.40,000 அபராதமும் விதித்து திருக்கோவிலூர் மாஜிஸ்திரேட் வெங்கடேஷ்குமார் தீர்ப்பளித்தார்.
நீதிமன்றத்தில் வீரன் ஆஜராகாததால், அவரை சிறையில் அடைக்க பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.