திருவண்ணாமலை, அக்.15-
திருவண்ணாமலை அருகே நெடுஞ்சாலை வழிகாட்டி பலகை 6 மாதங்களாக தரையில் படுதது துாங்கும் அவலம் நீடிக்கிறது. இதை கவனிக்க அதிகாரிகளுக்கு நேரம் இல்லாதது ஏன் என தெரியவில்லை.
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் உள்ளன. இதை பராமரிக்க கோட்ட மற்றும் மண்டல அளவில் அதிகாரிகள் உள்ளனர். இந்நிலையில் நெடுஞ்சாலைகளில் வரும் சந்திப்புக்கள், ரவுண்டானாக்களில் டிரைவர்கள் வசதிக்காக ஊர்களின் பெயர்கள் மற்றும் எவ்வளவு தொலைவு என்பது குறித்து ராட்சத பெயர் பலகைகள் வைப்பது வழக்கம்.
இதை கார்,லாரி மற்றும் பஸ் டிரைவர்கள் பார்த்து ஊருக்குள் செல்லாமல் பைபாஸ் சாலைகளில் வாகனங்கள் திருப்பி தாங்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கு எளிதாக சென்று விடுவார்கள்.
இந்நிலையில் திருவண்ணாமலை-திருக்கோயிலுார் ரோடு விரிவாக்கம் பணி அன்மையில் முடிந்தது. மேலத்திக்கான் ரிங் ரோடு பகுதியில் வைக்கப்பட வேண்டிய மாநில நெடுஞ்சாலை வழிகாட்டி பலகை ரோடு ஓரம் மண்ணில் போடப்பட்டு 6 மாதங்கள் கடந்த நிலையில் அதை ரோட்டில் மேல்பகுதியில் பொருத்தாமல் அதிகாரிகள் அலட்சியமாக விட்டுவிட்டனர்.
இதனால் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டி தயாரிக்கப்பட்ட வழிகாட்டி பெயர் பலகை மண்ணில் புதைந்து புதர்மண்டி வீணாகி வருகிறது. மக்கள் வரிப்பணம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளால் வீண் அடிக்கப்பட்டு வருவது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.