நீர் இருப்பு 117.95 அடியாக உள்ளது
திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 62 கன அடியாக குறைந்திருக்கிறது. தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழையில்லாததால் நீர்வரத்து குறைந்துள்ளது.
சாத்தனூர் அணையின் பாசனத்தை நம்பி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி நடைபெறுகிறது. 3 மாவட்டங்களிலும் 88 ஏரிகள் மற்றும் திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டு பாசன பகுதியில் 5 ஆயிரம் ஏக்கர் விளை நிலம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் கூட்டுக் குடிநீர் திட்டங்களும் சாத்தனூர் அணையை நம்பியே உள்ளன.
இந்த ஆண்டு பருவமழை கைகொடுத்ததால், சாத்தனூர் அணை முழு கொள்ளளவை நெருங்கியிருக்கிறது. அணையின் மொத்த நீர்மட்டமான 119 அடியில் தற்போது 117.95 அடி நிரம்பியிருக்கிறது. அணையின் மொத்த நீர் கொள்ளளவான 7321 மில்லியன் கன அடியில் தற்போது 7086 மில்லியன் கன அடி இருப்பு உள்ளது. இது அணையின் மொத்த நீர் இருப்பில் 96.79 சதவீதமாகும்.
இந்நிலையில், சாத்தனூர் அணை பாசனத்தை நம்பியிருக்கும் விவசாயிக ளிடம் முதற்கட்டமாக ஏற்கனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தி கருத்துக் கேட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக, 3 மாவட்ட விவசாயிகளை அழைத்து கருத்துக் கேட்க உள்ளனர். விவசாயிகள் தெரிவிக்கும் தேவையின் அடிப்படையில், சாத்தனூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். சம்பா பருவ அறுவடை தற்போது நடந்து வருகிறது. ஒரு சிலறது பகுதிகளில் ஜனவரி முதல் வாரத்தில் அறுவடை தொடங்க உள்ளது.
எனவே, தற்போதுள்ள ஏரி மற்றும் கிணற்று நீர் பாசனத்தை நம்பி இந்த போக சாகுபடி முடிந்து விடும். எனவே, பின்சம்பா பருவ சாகுபடிக்கு சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் கருதுகின்றனர். அதனால், சாத்தனூர் அணையில் இருந்து பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து அதிகபட்சமாக 90 நாட்கள் வரை பாசனத் துக்கு தண்ணீர் திறப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.
மேலும், செங்கம் தாலுகாவில் உள்ள குப்பனத்தம் அணையின் நீர்மட்டம் 59.04 அடிக்கு 47.56 அடியும், கலசபாக்கம் தாலுகா மிருகண்டா அணையின் நீர்மட்டம் 22.97 அடிக்கு 17.06 அடியும், போளூர் தாலுகா செண்பகத்தோப்பு அணையின் நீர் மட்டம் 62.32 அடிக்கு 54.12 அடியும் நிரம்பியிருக்கிதறது. எனவே, இந்த 3 அணைகளில் இருந்தும் இந்த ஆண்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் அளவில் நீர் இருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.