திண்டுக்கல் மாவட்டத்தில் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான திறனாய்வு தேர்வு முடிவு வெளியாகி 2 ஆண்டுகள் ஆகியும் உதவித்தொகை கிடைக்காமல் மாணவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையால் அரசு பள்ளி மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் திறனாய்வு தேர்வு கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் 1500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் பட்டப் படிப்பு மூன்று ஆண்டுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி 2023, 2024, 2025 ஆகிய ஆண்டுகளில் திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் உள்ளிட்ட அனைத்து தாலுகாக்களிலும் ஏராளமான மாணவர்கள் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றனர்.
2023, 2024 ஆகிய ஆண்டுகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை. இதனால் பிளஸ் 2 முடித்துள்ள மாணவர்கள் கல்லூரியில் சேர உதவித்தொகையை எதிர்நோக்கி உள்ளனர்.
2025-ஆம் ஆண்டுக்கான தேர்வு முடிவுகள் 3 மாதம் ஆகியும் இதுவரை வெளியிடப்படவில்லை. இதனால் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் கல்வி உதவித்தொகை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
தேர்வு முடிவுகள் வெளியான மாணவர்களுக்கு இம்மாத இறுதிக்குள் கல்வி உதவித்தொகை அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.